Published : 24 Jul 2019 11:08 AM
Last Updated : 24 Jul 2019 11:08 AM

இந்தப் பாடம் இனிக்கும் 04: பாஸ்போர்ட் இல்லாத பறவைகள்

ஆதி 

வேடந்தாங்கல், கோடிக்கரை, கூந்தங்குளம் ஆகிய தமிழக பறவை சரணாலயங்களுக்கு வரும் பறவைகள் அனைத்தையும் ‘வெளிநாட்டுப் பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள்’ என்று பலரும் ஆச்சரியத்துடன் சொல்வதை நீங்களும் கேட்டிருக்கலாம். இப்படி கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் அனைத்துமே வெளிநாட்டுப் பறவைகளா? இல்லை.

ஏன், எப்படி வருகின்றன?

வடக்கு, மேற்கு நாடுகளில் குளிர்காலத்தின்போது பறவைகளுக்கு உணவு கிடைப்பது அரிதாகிவிடுகிறது. இதன் காரணமாக உணவு தேடி தெற்கு நாடுகளுக்கு அவை வலசை வருகின்றன. இப்படிக் குறிப்பிட்ட காலத்தில் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்குச் செல்லும் பறவைகள் ‘வலசைப் பறவைகள்’ எனப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரே பகுதிக்கு பறவைகள் திரும்பத் திரும்ப வலசை வருகின்றன.

இப்படி வலசை வரும் பறவைகளின் நோக்கம் இரை தேடுவதும் உகந்த தட்பவெப்ப நிலையில் வாழ்வதும் மட்டும்தான். தங்கள் தாய்நாட்டில் உகந்த தட்பவெப்பநிலை திரும்பிய பிறகு, இந்தப் பறவைகளும் தங்கள் தாயகத்துக்குத் திரும்பிவிடுகின்றன. கண்களுக்குப் புலப்படும் அடையாளங்கள், சூரியன் நகரும் பாதை (சோளக்குருவி), வானில் நட்சத்திரங்கள் அமைந்துள்ள விதம் (வாத்து இனங்கள்), பூமியின் காந்தப் புலம் – காந்தப் புலங்களில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த வலசைப் பயணத்தைப் பறவைகள் மேற்கொள்கின்றன.

எல்லாமே வெளிநாட்டவை அல்ல!

வலசைக்கு வந்துசெல்லும் இடத்தில் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை. ஒரு பறவை எந்த நாட்டில் இனப்பெருக்கம் செய்கிறதோ, அதுவே அதன் தாய்நாடு. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் நம் நாட்டில் இனப்பெருக்கம் செய்வதில்லை. ஒரு வேளை நீங்கள் பார்க்கும் பறவை நம் நாட்டிலேயே கூடு கட்டி இனப் பெருக்கம் செய்கிறது என்றால், அது நம் நாட்டுப் பறவைதான்.

அதேநேரம் உள்நாட்டு வலசை பறவைகளும் உண்டு. உகந்த தட்பவெப்ப சூழ்நிலையைத் தேடி, உள்நாட்டுக்குள்ளேயே வலசை வரும் பறவைகளாக அவை இருக்கும். கூழைக்கடா, பூநாரை போன்ற பறவைகள் இப்படிப்பட்டவை தான். இந்தியாவில் சுமார் 1337 பறவை வகைகள் உள்ளன. அவற்றில் சுமார் 525 வகைகள் தமிழகத்தில் காணப்படுகின்றன. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் உள்ளன. இந்தியாவில் காணப்படும் பறவைகளில் கால் பகுதி வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வலசை வருபவை.

இந்த வாரம்

ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘இயற்கை’ என்ற இயலின்கீழ் ‘சிறகின் ஓசை’ என்ற உரைநடை உலகம் பகுதி.

ஆறு மணிக் குருவி (Indian Pitta) – மைனாவின் உருவை ஒத்த இந்தப் பல வண்ணப் பறவை இமயமலை, மத்திய இந்திய மலைப்பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வலசை வருகிறது.

சோளக்குருவி (Rosy Starling) – பார்ப்ப தற்கு நம்ம ஊர் மைனாவைப் போலிருக்கும் இந்த இளஞ்சிவப்புப் பறவை, ஐரோப்பாவில் இருந்து கூட்டம்கூட்டமாகத் தமிழகம் வருகிறது.

பட்டைத் தலை வாத்து (Bar Headed Goose) – இமயமலைத் தொடரின் உயரமான மலைகளைத் தாண்டி தமிழகத்துக்கு வலசை வருகிறது.

அரிய சாதனைகள்

* ஆர்டிக் ஆலா (Arctic Tern) பறவை ஓராண்டுக்கு சராசரியாக 38,000 கி.மீ. பயணம் செய்கிறது.
* பொன்னிற உப்புக்கொத்தி (Pacific golden plover) அலாஸ்காவில் இருந்து ஹவாய் தீவுகள் இடையிலான 4,800 கி.மீ. தொலைவை இடையில் ஓரிடத்தில்கூட நிற்காமல் கடந்து விடுகிறது.
* மண்கொத்தி உள்ளான் (Snipe) எனப்படும் பறவை, வலசை பறவைகளிலேயே மிகவும் வேகமானது, சராசரியாக 97 கி.மீ. வேகத்தில் பறக்கிறது.
* வேகமாகப் பறப்பதன் காரணமாக ஆங்கிலத்தில் Swift என்றழைக்கப்படும் உழவாரன் பறவைகள், இரவில் இறக்கைகளை அடிக்காமல் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் மிதந்தே வலசை செல்கின்றன. இப்படி மிதந்து செல்லும்போது இப்பறவைகள் அரைத்தூக்கம் தூங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
* கொக்குகள், Geese வகை வாத்துகள், ஆங்கில எழுத்தான V வடிவத்தில் கூட்டமாகப் பறந்து வலசை செல்கின்றன. இந்த வடிவத்தில் பறக்கும்போது, பக்கவாட்டில் வரும் பறவைகளின் மீது காற்றின் இழுவிசை குறைவாக இருக்கும். இதன் காரணமாக முதல் இடத்தில் இருக்கும் பறவையைத் தவிர, மற்ற பறவைகளால் எளிதாகப் பறக்க முடியும். தலைமை வகித்து முதலில் செல்லும் பறவை அயர்ச்சி அடைந்துவிடாமல் இருக்க, முதல் இடத்தை சுழற்சி முறையில் பறவைகள் மாற்றிக்கொள்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x