உலகின் குட்டி மீன் தொட்டி

உலகின் குட்டி மீன் தொட்டி
Updated on
1 min read

வீட்டில் மீன் வளர்ப்பது என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இல்லையா? மீன் தொட்டி வாங்கிக் கொடுக்கச் சொல்லி உங்கள் அம்மா அப்பாவிடம் அடம்கூடப் பிடிப்பீர்கள் தானே? மீன் தொட்டியில் அழகான குட்டி மீன்களைப் போட்டு நீங்களும் வளர்ப்பீர்கள்.

உங்களைப் போலத்தான் ரஷ்யாவைச் சேர்ந்த அனாட்டோலி கொனிகோ என்ற கலைப் பொருள் செய்யும் கலைஞருக்கு மீன்களை வளர்க்க ரொம்ப ஆசை. ஆனால், உங்கள் வீட்டில் இருப்பது போலப் பெரிய மீன் தொட்டியில் இல்லை, மிகவும் குட்டியூண்டு மீன் தொட்டியில் மீன் வளர்க்க ஆசைப்பட்டார். அதற்காக ஒரு குட்டி மீன் தொட்டியையும் செய்தார் அவர். அந்த மீன் தொட்டிதான் உலகின் மிகச் சிறிய மீன் தொட்டி என்ற பெயரை எடுத்துள்ளது.

அந்த மீன் தொட்டியோடு நீளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 30 மில்லி மீட்டர்தான். அதாவது நம் கையில் துளி என்பதற்குக் கை நுனியைக் காட்டுவோம் இல்லையா அந்த அளவுக்குத்தான் தொட்டியின் நீளம். 24 மில்லி மீட்டர் அகலமும், 14 மில்லி மீட்டர் உயரமும்தான் இருக்கிறது இந்த மீன் தொட்டி. மீன் தொட்டியை எடுத்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்தால் ஒரு குட்டி கல் இருப்பது போலத்தான் தெரியும். அந்தளவுக்கு இந்த மீன் தொட்டியை அனாட்டோலி ரொம்ப குட்டியாகச் செய்திருக்கிறார்.

அதுசரி, மீன் தொட்டியே ரொம்ப சிறியதாக இருந்தால் அதில் எப்படி மீன்களை விட முடியும் என்று ஒரு கேள்வி எழுகிறது அல்லவா? ரொம்ப பெரிதாக வளரக்கூடிய மீன்களை அனாட்டோலி இந்த மீன் தொட்டியில் வளர்க்கவில்லை. ஷெப்ரா என்றழைக்கப்படும் ரொம்ப குட்டியாக வளரக்கூடிய மீனை இந்த மீன் தொட்டியில் விட்டு வளர்க்கிறார்.

அது மட்டுமல்ல, குட்டி மீன் தொட்டிக்குள் குட்டி கூழாங்கற்களையும்கூடப் போட்டு வைத்திருக்கிறார். இந்த மீன் தொட்டியில் உள்ள இன்னொரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா? ஸ்பூன் கரண்டியால் இரண்டு முறை தண்ணீரை எடுத்துத் தொட்டியில் இட்டால் தொட்டி நிரம்பிவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in