

காட்டில் வாழும் விலங்குகளில் தலைவன் யார்? சிங்கம் என்று சொல்லிவிடுவீர்கள். காட்டிலும், நாட்டிலும் வாழும் பறவைகளில் யார் தலைவன் என்பதை உங்களால் காட்டமுடியுமா? மயிலையோ, கழுகையோ நீங்கள் சொல்லலாம்.
ஆனால், இவற்றைத் தாண்டி இன்னொரு பறவை உள்ளது. இந்தப் பறவைக்கு இயற்கை வழங்கிய திறமை மிகவும் அளப்பரியது. அந்தப் பறவையின் பெயர் மரங்கொத்திப் பறவை!
மரத்தைக் கொத்தும்போது இந்தப் பறவையின் தலை அசைவைக் கவனித்திருக்கிறீர்களா? அது மரத்தைக் கொத்தும்போது “கிர்ர்ர்ர்...” என்ற ஓசையுடன், அதன் தலை ஒரு டிரில்லர் மெஷின்போல அதிவேகமாக அசைவதைப் பார்த்திருப்பீர்கள்.
மரங்கொத்திப் பறவை அதிவேகத்தில் சர்வசாதாரணமாக மரத்தைக் கொத்தித் துளைத்துவிடும். ஆனால் அதற்குத் தலைசுற்றுவதில்லை. அதற்கு எவ்வித எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. மரங்கொத்தியால் மட்டும் எப்படி இத்தனை வேகமாகத் தலையை அசைக்க முடிகிறது?
இந்த இயற்கை அதிசயத்துக்குக் காரணம் உள்ளது. மரங்கொத்தியின் தலையில் அமைந்துள்ள அதிர்வுகளைத் தாங்கும் நான்கு விதமான அமைப்புகள்தான் அதற்குக் காரணம் என்று உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அந்த நான்கு அமைப்புகளில் முதலாவது உறுதியான, நெகிழும் தன்மையுள்ள அதன் கூர்மையான அலகு. அடுத்தது, ஹையாய்டு என்று அழைக்கப்படும் அதன் மண்டையோட்டைச் சுற்றி அமைந்திருக்கும் ஒருவகை நெகிழும் தன்மை கொண்ட திசுப்பகுதி.
மண்டையோட்டில் அமைந்துள்ள பஞ்சு போன்ற எலும்பு. மூன்றாவது அமைப்பு மிகச்சிறிய மூளை. அத்துடன் தலையை அசைக்கும்போது மூளைக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மண்டையோட்டுக்கும் மூளைக்கும் இடையே இயற்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் குறுகிய இடைவெளி.
நான்காவது இந்த ஆச்சரியமான இடைவெளியில் ஒரு மிக மெல்லிய வடிகட்டி அமைந்திருக்கிறது. மரங்கொத்தி மிக வேகமாகத் தலையை அசைத்து மரத்தைக் கொத்தும்போது ஏற்படும் அதிர்வுகள் மூளையைத் தாக்காதவாறு தடுத்துவிடுகின்றன. இதனால் மரங்கொத்தியின் மூளைக்கு எந்தச் சேதமும் ஏற்படுவதில்லை. இந்த அற்புத அமைப்பினால்தான், மரங்கொத்தியால் வினாடிக்கு 22 தடவை மரத்தைக் கொத்த முடிகிறது.
இப்போது சொல்லுங்கள்.. அதிர்வுகளைத் தாங்கும் ‘தலை'யை வரமாகப் பெற்ற மரங்கொத்தியைப் பறவைகளின் தலைவன் என்று சொன்னால் தப்பில்லை அல்லவா?