

நம்மைச் சூழ்ந்துள்ள உலகைப் பற்றி மனிதர்களான நமக்கு என்னவெல்லாம் தெரியும்? நிறைய தெரியும் என்று நினைத்தாலும்கூட, நாம் மறந்துவிட்ட, அதிகம் அறியாத பல விஷயங்கள் இருக்கின்றன.
ஞாபகப்படுத்தும் நூல்
நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் ஐம்பூதங்கள் (நிலம், நீர், காற்று, வானம், தீ), நம் முன்னோர் வாழ்ந்த ஐந்து வகை நிலப்பகுதிகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என இயற்கையிலிருந்து பிரிக்க முடியாத வண்ணம் நமது வாழ்க்கை பிணைக்கப்பட்டிருக்கிறது. இதை நமது முன்னோர் நன்கு உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாக இயற்கையை மீறாமல், அதனுடன் இணக்கமாக வாழ்ந்துவந்தார்கள்.
ஆனால், நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்தவுடன், இயற்கையை நாம் மறந்துவிட்டோம். இப்படி நாம் மறந்த விஷயங்களைத் திரும்ப நினைவுபடுத்துவதுபோல் ‘ஐந்தும் கலந்த மயக்கம்’நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியராகப் பணிபுரியும் நா. தாமரைக்கண்ணன்.
இயற்கை தரும் கொடைகள்
நமது மூதாதையர்களின் அறிவு, உலகப் பசியைப் போக்கும் உழவர்கள், மரங்கள், தண்ணீர், மழை, கடல், காற்று எனப் பல்வேறு இயற்கை அம்சங்கள் இந்தப் பூவுலகு செழித்திருக்கவும் மனிதர்கள் உயிருடன் வாழவும் எப்படியெல்லாம் பங்காற்றுகின்றன என்பதைப் பற்றி இப்புத்தகம் கவனப்படுத்துகிறது.
மற்ற உயிரினங்களுக்கு இல்லாத, மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் சிறப்பம்சம் ஆறாம் அறிவு. அதுதான் மனிதனின் பலம். ஆனால், அதுவே பல நேரம் பலவீனமாகவும் வெளிப்படுவதுதான் துரதிருஷ்டம். தன்னை வாழ வைக்கும் இயற்கையைச் சீரழிக்கும்போதும், போர்களின்போதும் மனிதனின் ஆறாம் அறிவு பயன்படுவதில்லை.
இப்படி இந்தப் புத்தகம் மாணவர்கள், பதின் பருவத்தினரிடம் இதுவரை அதிகம் பேசப்படாத கருத்துகளைப் பற்றி அறிமுகப்படுத்தி, விவாதிக்க முயல்கிறது.
அதேநேரம், இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்க வேண்டும். பேசத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றை விவரிக்கும் நடை, வார்த்தைத் தேர்வு இன்னும் எளிமையாக இருந்திருந்தால் வாசிக்கச் சிரமமில்லாமல் இருந்திருக்கும். எழுத்துக்கு பகலவனின் ஓவியங்களும் வடிவமைப்பும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.
ஐந்தும் கலந்த மயக்கம்,
ந. தாமரைக்கண்ணன்,
ஹனி பீ பப்ளிகேசன்ஸ்,
280/1, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86 தொலைபேசி: 044-28353005