

உங்கள் லஞ்ச் பேக்கில் ஒரு நாள் ஸ்பூன் இல்லாமல் போனால் என்ன செய்வீர்கள்? பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அம்மாவிடம் கோபித்துக்கொள்வீர்கள் இல்லையா? ஆனால், ஸ்பூனில் சாப்பிடுவது நமது பழக்கமில்லை. இது ஐரோப்பியர்களின் உணவுப் பழக்கம்.
ஸ்பூன், ஃபோர்க் எனப்படும் முள்கரண்டி இரண்டையும் இப்போது நாமும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். ஆனால், நமது பக்கத்து நாடான சீனாவில் ‘குவைட்சு’ எனப்படும் இரண்டு குச்சிகளைப் பயன்படுத்தி உணவு உண்ணும் பழக்கம் உள்ளது. ஒரு வயதுக் குழந்தை முதல் 90 வயது குடுகுடு பாட்டிவரை சிந்தாமல் சிதறாமல் இந்தக் குச்சிகளைக் கொண்டே சாப்பிடுகிறார்கள். நூடூல்ஸ், காய்கறிகள், மாமிசம், புலவ் எனப்படும் அரிசி உணவையும் அவர்கள் இந்தக் குவைட்சு குச்சிகளைப் பயன்படுத்தியே சாப்பிடுகிறார்கள். இந்தக் குவைட்சு குச்சிகளை ஆங்கிலத்தில் ‘சாப்ஸ்டிக்ஸ்’(Chopsticks) என்று அழைக்கிறார்கள்.
பழமையான குச்சிகள்
குவைட்சு குச்சிகளைப் பயன்படுத்தி உணவை உண்ணும் பழக்கம் கி.மு. 500-களில் தொடங்கியது. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான பழக்கம் இது. மாமிசத்தை வேகவைக்க சீனர்கள் நெருப்புத் துண்டுகளைப் பயன்படுத்தினார்கள். அதாவது ஒரு அகலமான பாத்திரத்தில் மசாலா தடவப்பட்ட மாமிசத் துண்டுகளை வைத்து சுற்றிலும் நெருப்புத் துண்டுகளை வைத்துவிடுவார்கள். மாமிசத் துண்டுகள் வெந்தபிறகு அவற்றைக் கையால் எடுத்தால் சுடும் அல்லவா? இதற்காக இரண்டு குச்சிகளை இடுக்கிபோல் பயன்படுத்தி அவற்றை எடுத்துப் பரிமாறும் பாத்திரத்தில் வைத்துக் கொண்டார்கள். மாமிசம் நெருப்பின் வெப்பத்தில் நன்றாக வெந்திருக்கிறதா என்று பார்க்க, அதைச் சமைப்பவர்கள் குச்சியில் பிடித்தபடியே கொஞ்சமாக ருசி பார்த்தார்கள். இந்தப் பழக்கமே பிறகு சிறிய அளவில் கைக்கு அடக்கமான குவைட்சு குச்சிகளாக மாறி, சாப்பாட்டு மேஜைக்கு வந்தது என்று கூறுகிறார்கள்.
இவரும் காரணம்
அர்த்தமுள்ள நல்ல வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சீனர்களுக்குச் சொல்லித் தந்தவர் கிமு 500-களில் வாழ்ந்த மாமேதையான கான்பூசியஸ். அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட சீனர்கள், உணவு மேஜையில் கத்தியைக் கொண்டு மாமிசத்தை வெட்டிச் சாப்பிடும் பழைய முறையைக் கைவிட்டார்கள். அவரே குவைட்சு குச்சிகளைப் பயன்படுத்தி உணவு உண்ண சீனர்களை வலியுறுத்தினார் என்றும் சொல்கிறார்கள்.
சீனா, மியான்மர், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இன்று சாப்ஸ்டிக்ஸ் குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சீனமொழியில் குவைட்சு என்பது இரண்டு சொற்ககளின் சேர்க்கையில் உருவானது. குவை என்றால் ‘வேகமான’ என்பது பொருள். ‘சு' என்றால் மகன் என்பது பொருள். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களுக்கு ஒரு ஜோடி குவைட்சு குச்சிகளை கொடுத்து அனுப்புவது வழக்கமாம்.