

சதுரங்க ஆட்டத்தில் புதிய வியூகங்கள், உத்திகளைப் பயன்படுத்திப் பலரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறார் ஒரு சிறுமி. புதுச்சேரியைச் சேர்ந்த அவரது பெயர் கமலினி ஆராதனா நிம்பன். 6 வயதான இந்தச் சிறுமி தனது அசாத்தியத் திறமையால் அண்மையில் நடந்த தேசியச் சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வசமாக்கினார். இதன் மூலம் ஐரோப்பாவில் நடைபெற்றவுள்ள சர்வதேசப் போட்டிக்குத் தேர்வாகி இருக்கிறார்.
புதுச்சேரியில் உள்ள கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி சங்கர வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது அம்மா, அப்பா மாதரசி-கார்த்திகேயன். சிறு வயதிலேயே சதுரங்க விளையாடக் கற்றுக்கொண்ட கமலினி, பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன் சதுரங்க ஆட்டத்தில் புதிய வியூகங்களையும் உத்திகளையும் அறிந்துகொண்டு விளையாடத் தொடங்கினார்.
போட்டிகளில் திறமையாக விளையாடிய கமலினி, தாக்குதல் ஆட்டத்திலும் தடுப்பு ஆட்டத்திலும் சிறந்து விளங்க ஆரம்பித்தார். இதன் காரணமாகச் சிறு வயதிலேயே மாநிலம், தேசிய அளவில் விளையாடிச் சர்வதேச அளவுக்கு உயர்ந்துவிட்டார். இதுவரை தேசிய, காமன்வெல்த் மற்றும் சர்வதேசப் போட்டிகள் பலவற்றில் வெற்றி பெற்றுச் சாதனை படைத்திருக்கிறார் இந்தச் சிறுமி.
அண்மையில் சர்வதேசச் சதுரங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட இளம் ஆட்டக்காரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இந்தக் குட்டிச் சிறுமி. அண்மையில் நாக்பூரில் நடைபெற்ற 6-வது தேசியப் பள்ளிகள் சதுரங்க விளையாட்டு போட்டியில் புதுச்சேரி சார்பாகப் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் கமலினி. ஒன்பது சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சீனாவில் நடைபெற உள்ள ஆசியப் பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஐரோப்பாவின் ருமேனியாவில் நடைபெறும் உலகப் பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியா சார்பாக விளையாடத் தகுதி பெற்றுள்ளார் கமலினி.
இதுகுறித்து சிறுமி கமலினி ஆராதனா நிம்பன் கூறுகையில், “தொடர்ச்சியாக ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்று ஒரு புள்ளியில் கோப்பையைத் தவறவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் தவறுகளைத் திருத்திக்கொண்டு எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவேன். வரும் ஜுலை மாதம் ஆந்திராவில் நடைபெறும் தேசிய சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று எனது சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்துவேன்” என்று சொன்னார்.
செஸ் சாம்பியன் தயார்!