

தோட்டதில் வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டதும் அவற்றைப் பிடிக்க ஓடுகிறீர்களா? எறும்புகளைக் கண்டால் எரிச்சலுடன் அவற்றை நசுக்க நினைக்கிறீர்களா? பூச்சிகளைப் பார்த்தாலே அவற்றை அடிக்க வேண்டும் என்று உங்களைப் போன்ற குழந்தைகள் பலருக்கும் தோன்றலாம்.
ஒரு மனிதனுக்கு 200 கோடி பூச்சிகள் என்ற விகிதத்தில் விதவிதமான பூச்சிகள் இந்த உலகில் வாழ்கின்றன. இனால் பூச்சிகளை நாம் ஒழிக்கவே முடியாது; அவை நம்மோடுதான் வாழ்ந்தாக வேண்டும். எனவே அவற்றின் மீது கோபம் கொள்ளாமல், அவற்றைப் பற்றிய ஆச்சரியமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போது அவற்றை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்வீர்கள்.
சூப்பர்மேன் ஈக்களும் கொசுக்களும்
‘ஹவுஸ் பிளை’ என்று நாம் பாடப் புத்தகங்களில் படித்த ‘ஈ’க்கள் தற்போது சினிமா ஹீரோவாக உயர்ந்துவிட்டன. புரியவில்லையா!? ஈயை முக்கிய கேரக்டராக வைத்து எடுக்கப்பட்ட ‘ நான் ஈ’ திரைப்படத்தில் சூப்பர்மேன் செய்யும் எல்லா சாகசங்களையும் ஒரு ஈ செய்ததை மறந்திருக்க மாட்டீர்கள். இது கற்பனையாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது.
ஆனால் நிஜத்திலும் ஈக்களுக்குச் சில அசாத்திய சக்திகள் இருகின்றன. அவற்றில் ஒன்று ஈக்களின் கண்கள். இவற்றுக்கு ‘மைக்ரோஸ்கோப்’ பார்வை உண்டு. மனிதர்களின் கண்களைவிடப் பத்து மடங்கு அதிக வேகம் கொண்ட ‘ரிஃப்லெக்ஸ்’ ஈக்களின் கண்களில் உள்ளன.
அதேபோல ஈக்களின் கண்களைக் ‘கூட்டுக் கண்கள்’ (compound eye) என்று அழைக்கிறார்கள். இந்தக் கூட்டுக்கண்களில் நூற்றுக்கணக்கான ஆறு பக்க லென்சுகள் உள்ளன. இந்தக் கூட்டுக்கண்கள் ஒவ்வொன்றும் தனித்து இயங்கும் திறன் கொண்டவை. ஒரே நேரத்தில் பல எதிரிகள் தாக்க வந்தாலும் ஈ எஸ்கேப் ஆகிவிடும். இதனால்தான் கொசுக்களைப் போல ஈக்களை நாம் அத்தனை சுலபத்தில் அடிக்க முடிவதில்லை.
பிறகு ஹோவர் ஃபிளைஸ் (hover flies) என்ற சிறிய வகை ஈக்கள் ஹம்மிங் பேர்டு சிட்டுக்குருவிகளை விட வேகமாகச் சிறகடிக்கும். விநாடிக்கு ஆயிரம் தடவை சிறகுகளை அசைக்கின்றன.
இன்று கொசுக்கள் இல்லாத நாடுகளே இல்லை. கொசுக்கள் போர் விமானங்களைப்போல் தலைகீழாகவும், ஹெலி ஹாப்டர்களைப் போல இருந்த இடத்திலிருந்து நேரே மேலே எழும்பியும் பறக்கும் திறமை கொண்டவை. அவ்வளவு ஏன், மழை பெய்யும்போது தன் உடல்மீது ஒரு மழைத்துளி கூட பட்டுவிட்டாமல் ஜிக்ஜாக்காக எஸ்கேப் ஆகிப் பறப்பதில் கொசு பெரிய கில்லாடி.
நம் உடலில் உள்ள வெப்பத்தையும், நாம் சுவாசித்து வெளியேற்றும் கார்பன் டை-ஆக்ஸைடையும் வைத்தே கொசுக்கள் நம்மைத் தேடி வந்து கடிக்கின்றன.
ஜெட் வேக தேனீக்கள்
கூடுகட்டுவதில் தேனீக்களின் கணித அறிவைப் பற்றிப் பெரிய ஆராய்ச்சியே நடந்து கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாம் மறந்துவிட்ட கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையைப் (Joint family system) பல லட்சம் ஆண்டுகளாகத் தேனீக்கள் பின்பற்றி வருகின்றன.
வெப்ப மண்டல நாடுகளில் வாழும் பலவகைத் தேனீக்கள், ஒரு ஜெட் விமானத்தைப் போல் ஒலி எழுப்பிக்கொண்டு ஒரு மணிநேரத்துக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.
பறப்பதில் தும்பிகளும் கில்லாடிகள்தான். இவற்றுக்குப் பின்னோக்கிப் பறக்கத் தெரியும்.
நமக்கு மிகவும் பிடித்த வண்ணத்துப்பூச்சிகளில் உலகம் முழுவதும் 20 ஆயிரம் வகைகள் உள்ளன. வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ‘மோனார்ச்’ என்ற வண்ணத்துப்பூச்சி(Monarch) 3,050 கிலோமீட்டர் தூரம் பறந்து சென்று இடப்பெயர்ச்சி செய்யும்.
பூச்சிகளின் அதிசய உலகைப் பற்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிறையத் தெரிந்துகொள்ளுங்கள். பூச்சிகள் மீது உங்களுக்குக் கோபம் வரவே வராது.