

கஜாகஸ்தான் நாட்டில் நடைபெற்ற 10 வயதுக் குட்பட்டோருக்கான கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் ஏ.எஸ் ஷர்வாணிகா! இந்திய செஸ் வரலாற்றில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கானப் பிரிவில் பதக்கம் வென்ற மூன்றாவது வீராங்கனை இவர். இதற்கு முன்பு கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் நெசவுத் தொழில் செய்து வருகிறார் இவரின் அப்பா சரவணன். டியூஷன் வகுப்புகளை நடத்தி வந்தவர் அம்மா அன்பு ரோஜா. செஸ் விளையாட்டுப் பின்னணி இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 20க்கும் அதிகமான நாடுகளுக்குப் பயணம் செய்து, 20க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் தொடர்களில் விளையாடி முத்திரைப் பதித்துள்ளார் ஷர்வாணிகா.
“பெருக்கல் வாய்ப்பாட்டை, ஆங்கில எழுத்துகளைத் தலைகீழாகச் சொல்வது, எதையும் வேகமாகப் படித்து ஒப்பிப்பது என ஷர்வாணிகாவின் திறமை எங்களைப் பிரமிக்க வைத்தது. கரோனா ஊரடங்கின்போது அவள் அக்கா ரட்ஷிகாவோடு சேர்ந்து செஸ் விளையாடத் தொடங்கினாள்.
எதிர்பாராத விதமாக ரட்ஷிகாவைவிடச் சிறப்பாக விளையாடியதால் தொடர்ந்து ஊக்கப்படுத்தினோம். வீட்டில் தொடங்கிய ஷர்வாணிகாவின் செஸ் வெற்றி அடுத்து பள்ளி, மாவட்ட, மாநில, தேசிய அளவுகளில் விரிவடைந்தது” என்கிறார் அன்பு ரோஜா.
ஒரு செஸ் வீராங்கனை ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தைப் பெறுவதற்கு 3 மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். அதன் முதல் படியாக ‘Women’s Candidates Master’ பட்டத்தைப் பெற்றிருக்கும் ஷர்வாணிகா, அடுத்து ‘Women’s Fide Master’, ‘Women’s Grand Master’ பட்டங்களைப் பெறவும், ஃபிடே புள்ளிகளைக் கூட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
ஷர்வாணிகாவை ஊக்கப்படுத்தும் விதமாக, சென்னை வேலம்மாள் பள்ளி அவரின் கல்விச் செலவை ஏற்றுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார் ஷர்வாணிகா.
ஆனால், செஸ் விளையாட்டில் புது மைல்கல்லை எட்ட நிறைய சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டியது அவசியம். இந்தச் செலவுகளை சமாளித்து வரும் ஷர்வாணிகாவின் பெற்றோர், ‘ஸ்பான்சர்’ கிடைத்தால் உதவியாக இருக்கும் என்கின்றனர்.
இளம் வயதிலேயே செஸ்ஸில் சாதிக்கத் தொடங்கி இருக்கும் ஷர்வாணிகா, “திவ்யா தேஷ்முக்கைப் போல ஒரு நாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்வேன்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.