

காற்று ஏன் நம் கண்களுக்குத் தெரியவில்லை, டிங்கு? - ரா. கவிரோனிஷா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
காற்றில் உள்ள வாயு மூலக்கூறுகள் மிகவும் சிறியவை. அவை ஒளியைக் குறிப்பிடத்தக்க அளவில் உறிஞ்சுவதோ பிரதிபலிப்பதோ இல்லை. ஒளி என்பது மின்காந்த அலைகளின் வடிவம். ஒளி அலைகள் பொருள்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் பொறுத்து நிறங்கள் நமக்குப் புலப்படும். காற்றில் நைட்ரஜன், ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் உள்ளன. இந்த மூலக்கூறுகள் ஒளியின் அலைநீளத்தைவிட மிகவும் சிறியவை, எனவே அவை ஒளியைக் கணிசமாகத் தடுப்பதில்லை.
ஒரு பொருள் நிறமுள்ளதாகத் தோன்ற, அது குறிப்பிட்ட அலைநீள நிறங்களை உறிஞ்ச வேண்டும், மற்றவற்றைப் பிரதிபலிக்க வேண்டும். காற்றின் மூலக்கூறுகள் இந்தச் செயல்முறையில் ஈடுபடாததால், ஒளி அவற்றின் வழியாகத் தடையின்றி கடந்து செல்கிறது. ஆனாலும் காற்றில் உள்ள சிறிய துகள்கள் சில நேரம் ஒளியைச் சிதறடிக்கலாம். இதனால்தான் வானம் நீல நிறத்தில் தோன்றுகிறது. ஆனால், தூய்மையான காற்றில் இந்தச் சிதறல் மிகக் குறைவாக இருப்பதால், காற்று நம் கண்களுக்குப் புலப்படவில்லை, கவிரோனிஷா.
ஆழ்துளை கிணறுகள் அதிகரிப்பதால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டா, டிங்கு? - ர. தக்ஷணா, 7-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
ஆழ்துளை கிணறுகள், சுரங் கங்கள், குவாரிகள் போன்ற வற்றால் பெரிய அளவில் இயற்கை நிலநடுக்கங்களைப் போல் ஏற்படுவதில்லை. ஆனால், நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. பூமிக்குள் 2000 அடி ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனாலும் மனிதர்களின் செயல்பாடுகள் 1000 அடிகளைத் தாண்டினால் நல்லதல்ல, தக்ஷணா.