மாத்திரைகளை இரண்டுவிதமாக எடுத்துக்கொள்வது ஏன்? - டிங்குவிடம் கேளுங்கள்

மாத்திரைகளை இரண்டுவிதமாக எடுத்துக்கொள்வது ஏன்? - டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

நாம் தார்ச்சாலையில் பயணிக்கும்போது தொலைவில் தண்ணீர் இருப்பதுபோலக் கானல்நீர் தெரிகிறது. அது எப்படி உருவாகிறது, டிங்கு? - வெயில் அதிகமாக இருக்கும் போது நிலப்பரப்பு வெப்பமடைந்து, நிலத்துக்கு மேலே இருக்கும் காற்றைச் சூடாக்குகிறது. மேலே உள்ள காற்று நிலத்திலிருந்து வரும் காற்றைவிடக் குளிர்ச்சியாக இருக்கிறது.

சூரியனிலிருந்து வரும் ஒளி, குளிர்ந்த, சூடான காற்றின் வழியே வரும்போது ஒளிவிலகல் (ஒளி வளைதல்) நடைபெறுகிறது. அது நம் கண்களுக்கு நீர் போல் மாயத் தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. அதாவது அங்கே தண்ணீர் இருக்காது, ஆனால் தண்ணீர் இருப்பதுபோல் தோற்றம் தருகிறது. இதைத்தான் கானல் நீர் என்கிறார்கள், பிரகன்யா.

சில மாத்திரைகளைச் சாப்பிடுவதற்கு முன்பும் சில மாத்திரைகளைச் சாப்பிட்ட பின்பும் டாக்டர்கள் சாப்பிடச் சொல்கிறார்களே ஏன், டிங்கு? - கே. கெளசல்யா, 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, செல்வபுரம், கோவை.

உணவுக்கு முன்பாகவும் உணவுக்குப் பின்பாகவும் மாத்திரைகளைச் சாப்பிடச் சொல்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. சில மாத்திரைகள் சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளும்போது, விரைவாகச் செயல்பட்டு உடலில் உறிஞ்சப்படும்.

மாத்திரை சாப்பிடுவதன் பலன் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். உணவு அல்லது பானங்களோடு சாப்பிட்டால் சில மாத்திரைகளின் திறன் சற்றுக் குறையும் என்பதாலும் சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிடச் சொல்கிறார்கள்.

சில மாத்திரைகள் வீரியம் கொண்டவையாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொண்டால் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம். உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும்போது அவற்றின் வீரியம் குறைந்து, பாதிக்காத வண்ணம் செயல்படும். எனவே சாப்பிட்ட பிறகு சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.

சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொள்ளும் போதும் சில மாத்திரைகளால் வயிறு புண்ணாகலாம் என்பதற்காக, அதைத் தடுக்கும் விதத்தில் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். இப்படிப் பலவிதக் காரணங்களால் மாத்திரைகள் சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள், கெளசல்யா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in