மூலக்கதை: க்ரிம் பிரதர்ஸ் - இலாவும் மூன்று தேவதைகளும்

மூலக்கதை: க்ரிம் பிரதர்ஸ் - இலாவும் மூன்று தேவதைகளும்
Updated on
3 min read

இலாவின் அம்மா பஞ்சிலிருந்து நூலை நூற்கும் வேலை செய்து சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஓய்வு நேரத்தில் இலாவையும் நூல் நூற்கச் சொல்வார். ஆனால், இலாவுக்கு அதில் ஆர்வம் இல்லை. அம்மா சொல்கிறாரே என்று விருப்பமின்றி, மெதுவாகச் செய்வாள்.

அன்றும் இலா பஞ்சை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அதைக் கண்ட அவள் அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. இலாவைத் திட்டிவிட்டார். உடனே தெருவுக்கே கேட்கும் விதமாக ‘ஓ’ என்று குரல் கொடுத்து அழ ஆரம்பித்தாள்.

அப்போது அந்த வழியாகச் சென்ற ராணியின் காதில் இலாவின் அழுகை ஒலி கேட்டது. உடனே தன் உதவியாளரை அனுப்பி, வீட்டிலிருந்தவர்களை வெளியே வரச் சொன்னார். இலாவும் அவள் அம்மாவும் வெளியே வந்தனர்.

“ஏன் குழந்தை அழுது கொண்டிருக்கிறாள்?” என்று கேட்டார் ராணி.

இலாவைக் குறை சொன்னால், ராணி தண்டனை கொடுத்துவிடுவாரோ என்று பயந்தார் இலாவின் அம்மா. அதனால், “என் மகள் அற்புதமாக நூல் நூற்பாள். அவளுக்கு நூல் நூற்பதற்குப் பஞ்சு தேவை. அதை வாங்க என்னிடம் பணம் இல்லை. அதற்காகத்தான் இப்படி அழுகிறாள்” என்று பெருமையாகச் சொல்லிவிட்டார்.

அதைக் கேட்ட ராணி, “எங்கள் அரண்மனையில் நிறைய பஞ்சு இருக்கிறது. வேகமாக நூல் நூற்கும் திறமையுள்ள இந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறேன். அவள் விரும்பும் அளவுக்குப் பஞ்சு தருகிறேன்” என்று கூறிவிட்டு, அழைத்துச் சென்றார்.

தான் சொன்ன விஷயத்தால் இலா மாட்டிக்கொண்டாளே என்று அவள் அம்மா வருந்தினார்.

அரண்மனையில் ஓர் அறையில் இருந்த நூற்பு எந்திரத்தையும் பஞ்சையும் காட்டிய ராணி, “இன்னும் மூன்று நாள்களில் நீ இதை நூலாக நூற்று முடிக்க வேண்டும்” என்று கட்டளை இட்டுச் சென்றுவிட்டார்.

இலாவுக்கோ பயத்தில் அழுகை வந்தது. அவள் வாழ்நாள் முழுவதும் நூற்றாலும் அவளால் இந்தப் பஞ்சு முழுவதையும் நூலாக நூற்க முடியாது என்று புரிந்தது. ராணியிடம் உண்மையைச் சொல்லலாம் என்றால், பொய் சொன்ன அம்மாவுக்குத் தண்டனை கொடுப்பாரோ என்று அவளுக்குப் பயமாக இருந்தது. தன்னைக் காப்பாற்ற நினைத்துத்தானே அம்மா அப்படிச் சொன்னார். அவருக்காகவாவது கடுமையாக வேலை செய்து நூல் நூற்கலாம் என்கிற முடிவுக்கு இலா வந்தாள்.

இரவும் பகலும் தூங்காமல் வேலை செய்தாலும் கொஞ்சம் நூல்தான் நூற்க முடிந்தது. மூன்றாவது நாள் மாலை ராணி அறைக்கு வந்து, “என்ன எல்லாம் அப்படியே இருக்கிறது?” என்று விசாரித்தார்.

“அம்மா நினைவாக இருப்பதால் வேகமாக வேலை செய்ய முடியவில்லை. விரைவில் முடித்துவிடுகிறேன் ராணி” என்று பதில் சொன்னாள் இலா.

“நாளைக்குள் வேலையை முடித்துவிட வேண்டும்” என்று சொல்லிவிட்டு ராணி போய்விட்டார்.

‘என்னுடைய சோம்பேறித்தனத்தால்தான் இது எல்லாம் நடந்தது. என்னைக் காப்பாற்றவே என் அம்மா அப்படிச் சொல்லிவிட்டார். இந்த ஒருமுறை எனக்கு நல்வாய்ப்பு கிடைத்தால் இனி ஒரு போதும் சோம்பேறியாக இருக்க மாட்டேன்’ என்று மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள் இலா.

அப்போது ஒரு தேவதை அவள் முன் தோன்றியது. இலாவுக்கு கனவா, நிஜமா என்று புரியவில்லை.

“அழாதே இலா. இத்தனை நாள் சோம்பேறியாக, அம்மா சொல்வதைக் கேட்காவிட்டாலும் இந்த மூன்று நாள்கள் நீ கடுமையாக உழைத்தாய். இனி சோம்பேறியாக இல்லாமல் அம்மா சொல்வதைக் கேட்பேன் என்று உறுதி அளித்தால், நான் உனக்கு உதவுகிறேன்” என்றது தேவதை.

உடனே இலாவின் முகம் மலர்ந்தது. “நீங்கள் சொல்வது போலவே நடந்துகொள்கிறேன்” என்று உறுதியளித்தாள்.

“நான் மூன்று பெண்களை உதவிக்கு அனுப்புவேன். அவர்கள் உதவியுடன் நீ நூலைத் நூற்றுவிடலாம். மறுநாள் ராணி அளிக்கும் விருந்துக்கு நீ இந்த மூன்று பேரையும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால், உனக்கு நல்லதே நடக்கும்” என்று சொல்லிவிட்டு தேவதை மறைந்தது.

சில நிமிடங்களில் தேவதை சொன்னது போலவே மூன்று பெண்கள் வந்தார்கள். அதில் முதல் பெண்ணின் கால் மிகப் பெரிதாக இருந்தது. இரண்டாவது பெண்ணின் உதடுகள் பெரிதாக இருந்தன. மூன்றாவது பெண்ணின் கட்டை விரலின் அளவு பெரிதாக இருந்தது. அவர்கள் வேகமாக நூலை நூற்க ஆரம்பித்தார்கள். இவர்களுடன் சேர்ந்து இலாவும் இரவு முழுவதும் நூல் நூற்றாள்.

காலையில் ராணி வரும்போது அறை முழுக்க இருந்த பஞ்சு நூலாக நூற்கப்பட்டுத் தயாராக இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் ராணி.

“நீ செய்ய மாட்டாய் என்று நினைத்தேன். ஆனால், செய்து முடித்துவிட்டாய்! இவ்வளவு திறமையுள்ள உன்னை ராஜாவும் இளவரசனும் பார்க்க வேண்டும். இன்று மாலை நான் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்” என்றார் ராணி.

தேவதை சொன்னது போலவே தன் மூன்று அத்தைகளும் இந்த விருந்தில் கலந்துகொள்ளலாமா என்று இலா கேட்டாள். ராணியும் சம்மதித்தார்.

விருந்தின்போது, “ஏன் உங்கள் கால், உதடு, கட்டைவிரல் எல்லாம் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன?” என்று கேட்டார் ராஜா.

“நான் பஞ்சை ஈரப்படுத்த உதடுகளைப் பயன்படுத்துவேன். இவள் அதை விரலால் நூற்று, நூற்பு எந்திரத்துக்கு அனுப்புவாள். அவள் காலால் எந்திரத்தை அழுத்தி நூலைச் சுற்றுவாள். நாங்கள் வேகமாக நிறைய நூல் நூற்பதால்தான் இப்படி ஆகிவிட்டது” என்று பதில் கூறினார் அந்தப் பெண்.

அதைக் கேட்டு பதறிய ராஜா, “ஐயோ... அப்படியானால், இனி நீ நூல் நூற்க வேண்டாம். உன் படிப்புக்கு நான் உதவி செய்கிறேன்” என்று இலாவிடம் சொன்னார்.

ராணியும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு, இலாவுக்குப் பரிசுகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார். இலா அந்த மூன்று தேவதைகளுக்கும் நன்றி கூறிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினாள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in