

‘96’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ‘வாழா என் வாழ்வை வாழவே' என்கிற பாடலுடன் பயணத்தைத் தொடங்கிய இளைஞர்கள் ஏராளம். பயண ஒளிப்படத்தைச் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காகவே ‘ட்ரிப்' செல்வதும் இன்றைய இணைய யுகத்தில் பரவலாகியுள்ளது. இதற்கிடையில் வாழ்க்கையை ரசித்து வாழ பயணத்துக்கு முன்னுரிமை கொடுத்து உலா செல்பவர் ‘மெட்ராஸ் மார்கோ போலோ' சந்தீப் கண்ணா.
இந்தியாவில் சைக்கிளில் மட்டுமே 2,000 கி.மீ. பயணித்துள்ள சந்தீப், தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேசப் பயணங்களில் ஈடுபட்டுவருகிறார். தனது பயணங்களைப் பற்றி வலைப்பூவில் எழுதுவதையும் பழக்கமாக வைத்துள்ளார். சமீபக் காலமாகப் பயணங்கள் சார்ந்து பல்வேறு காணொளிகளை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு ‘டிராவல் விளாக’ராகப் பரிணமித்துள்ளார்.
'மொய் விருந்து' பாணியில் பயணம் குறித்த நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதோடு, அதில் ஈட்டும் வருவாயைக் கிராமப்புற குழந்தைகளின் கல்விக்கு உதவியும் வருகிறார். அதெலாம் சரி, அதென்ன ‘மெட்ராஸ் மார்கோ போலோ'?