

உலகெங்கும் இயங்கும் இசைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. சென்னையைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர் அங்கித் குப்தா, கிராமி உறுப்பினராகவும், விருதுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் ரெக்கார்டிங் அகாடமியில் வாக்களிக்கும் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழும் இசையும்
ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கிராமியின் நடுவர் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தியர்கள் தேர்வு செய்யப்படுவது அரிது.
இம்முறை நடுவர் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்களில் தென்னிந்தியாவிலிருந்து தேர்வாகியிருக்கும் ஒரே உறுப்பினர் அங்கித் மட்டுமே. இவருக்கு 22 வயதே ஆகியிருப்பதால், இளம் வயதில் கிராமி நடுவரான இந்தியராகவும் தனிச் சிறப்பைப் பெற்றுள்ளார்.
அங்கித் குப்தா எனப் பெயரைக் கொண்டிருப்பதால் இவர் வட இந்தியர் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பல தலைமுறைகளாகச் சென்னையில் வாழும், நன்கு தமிழ்ப் பேசத் தெரிந்தவர் அங்கித்.