

நாய்களின் பின்னால் ஓடுவது, பூனைகளின் கவனத்தை ஈர்ப்பது, அவை கேமராவைப் பார்க்கும் அந்த ஒரு நொடிக்காகக் காத்திருப்பது. இவை எல்லாம் ஒருவரின் அன்றாட வேலையாக இருந்தால்..? இதுவும் ஒருவகை ஒளிப்படக் கலைதான்! இப்படிச் செல்ல உயிரினங்களைப் படம்பிடிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ‘பெட் போட்டோகிராபர்’ கெளசிக்.
கரோனாவுக்குப் பிறகு...
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஒளிப்படக் கலையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தவர் கெளசிக். 2015 முதல் ‘வெட்டிங்ஸ் பை எக்ஸ்பொனென்ட்ஸ்’ (Weddings by Exponents) என்கிற நிறுவனத்தை நிர்வகித்துவருகிறார். 2020லிருந்து பெட் போட்டோகிராபியிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தது, கரோனா பெருந்தொற்று.
“சிறு வயது முதலே விலங்குகள் மீது எனக்கு ஆர்வம். அனிமல் பிளானட், நேஷனல் ஜியோகிரஃபிக் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளைப் பார்த்து வளர்ந்தவன். வீட்டில் நாய், பூனை போன்ற செல்ல உயிரினங்களை வளர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், அவற்றுடன் நேரத்தைச் செலவிடவும், அவற்றைப் ஒளிப்படம் எடுக்கவும் விரும்பினேன். 2020இல் கரோனாவால் வீட்டிலேயே முடங்கியிருந்த நேரத்தில் சர்வதேச அளவில் ஏற்கெனவே வளர்ந்திருந்த பெட் இண்டஸ்ட்ரி, இந்தியாவிலும் வளரத் தொடங்கியது.