

“இவன் எதற்கும் உதவ மாட்டான்” - மைக்கேலின் அம்மா டெபியைப் பார்ப்பவர்கள் எல்லாமே இதைத்தான் சொன்னார்கள். சிறு வயதிலிருந்தே மைக்கேல் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தான். அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருப்பான்.
எந்த வேலையைக் கொடுத்தாலும் அவனால் ஒழுங்காகச் செய்ய முடியாது. படிப்பு பற்றிக் கேட்கவே வேண்டாம், படுமந்தம். அவனுடைய துருத்திய காதைப் பார்த்து அவனைப் பலரும் ஏளனம் செய்வார்கள்.
கோபத்தில் சில நேரம் அடித்துவிடுவான். உடனே பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்துவிடுவார்கள். ஏற்கெனவே கணவனைப் பிரிந்துவிட்ட நிலையில், மகன் மைக்கேலின் நிலையால் டெபி நிலைகுலைந்துதான் போனார்.
பலருடைய அறிவுரையைக் கேட்டுத் தன் மகனை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லத் தொடங்கினார் டெபி. மைக்கேலுக்குக் ‘கவனச்சிதறல்’ பிரச்சினை இருப்பதாகச் சில மருத்துவர்கள் சொன்னார்கள். அவனுடைய துடிப்பைக் கண்ட மருத்துவர்களில் சிலர், வேறு விஷயங்களில் அவனை ஈடுபடுத்தும்படி அறிவுரை வழங்கினர்.
சில மருத்துவர்கள், “நீச்சல் கற்றுக்கொடுங்களேன்” என்றும் பரிந்துரைத்தார்கள். அதன்படியே டெபி செய்தார். உள்ளூரில் உள்ள ஒரு நீச்சல் மையத்தில் சேர்த்தார். அப்போது மைக்கேலுக்கு 8 வயது இருக்கும்.
ஆனால், அங்கே இன்னொரு சவால் காத்திருந்தது. நீச்சல் குளத்தைக் கண்டதுமே பயந்துபோய், தெறித்து ஓடினான் மைக்கேல். தண்ணீர் என்றாலே பயம் அவனுக்கு. “என்ன, இந்தப் பையன் இவ்வளவு அட்டூழியம் பண்றான்” - டெபியிடம் நீச்சல் பயிற்சியாளர் பாப் பௌமன் சற்றுக் கோபமாகவே கேட்டார்.
“அது வந்து.. அவன் கொஞ்சம் துறுதுறுன்னு இருப்பான்” என்று டெபி சமாளித்தார். “கொஞ்சம்கூடப் பக்குவம் இல்லாமல் இருக்கானே” என்று பாப் பௌமனிடமிருந்து பதில் வந்தது. இதைக் கண்டு டெபி மேலும் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்.