

இளசிலிருந்து பழசு வரை ‘எ.ம.ஏ.?’ (எனக்கு மட்டும் ஏன்?) என்று புலம்பாத மனசுகள் இல்லை. அதிலும் இளமை துள்ளும் வயதான 15 முதல் 24 வயதுப் பிரிவினரும்கூட, தற்போதைய நடைமுறை வாழ்க்கை சிக்கலாக இருப்பதாக நினைக்கிறார்கள்.
இவர்கள் இப்படி நினைப்பதற்குப் பிரத்யேகக் காரணம் ஏதும் இருக்கிறதா? நிறையவே இருக்கிறது. இந்த வயதுப் பிரிவினருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அதுதான் 2கே கிட்ஸ். 80, 90 கிட்ஸுக்குக் கிடைக்காத வாழ்க்கை முறை இந்த 2கே கிட்ஸுக்குக் கிடைத்திருக்கிறது.
ஒரு ரூபாய் காயினைப் போட்டு ஒரு நிமிடத்துக்குள் போன் பேச வேண்டுமே என்று திணறிய தலைமுறையினருடன் ஒப்பிடுகையில் தொடுதிரை வாழ்விகள் இந்த 2கே கிட்ஸ். சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் சேரவில்லை என்பதற்காக ஒரு மாசத்துக்கு அழுதவர்கள் 90 கிட்ஸ்.
மண்டை உடைந்து ரத்தம் பீறிடுகிற வன்முறை சினிமாக்களையும், “அந்த உலகத்தோட கனெக்ட் பண்ணிக்கிட்டுப் படத்தைப் பாக்கணும்..” என்று சொல்லி, அப்படிப் பார்க்கத் தெரியாதவனைப் புழுவைப் போலப் பார்ப்பவர்கள் 2 கேயினர். 90களில் ஏது பிக்கப், பிரேக்கப் எல்லாம்? ஆனால், இப்போதோ ‘பிரேக் அப் ஆயிடுச்சு..’ என்கிற வார்த்தையைக் கடந்து செல்லாத 2 கே குழாம் கிடையவே கிடையாது.