

மும்பை போன்ற ஒரு பெருநகரில், மின்சார ரயில்களின் இரைச்சலுக்கும் அதில் பிதுங்கி வழியும் மனிதக் கூட்டத்தின் நெரிசலுக்கும் இடையே தினமும் ஆயிரக்கணக்கான கதைகள் பிறக்கின்றன. ஆனால், அக்கம்பக்கத்து வீடுகளின் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட விரும்பும் 13 வயதில் அந்த மாநகரின் இதயத் துடிப்பைக் கண்டறிந்த ஒரு சிறுவன், அதை ஒரு வெற்றிகரமான புத்தொழில் நிறுவனமாக மாற்றிக்காட்டினான்.
அந்தச் சிறுவன் இன்று உயர்கல்வி பயின்று வரும் 21 வயது திலக் மேத்தா. ஆண்டுக்கு நூறு கோடி விற்று முதலைத் தொடக் காத்திருக்கும் திலக், இந்தியாவின் மிக இளவயது பிசினஸ்மேன்களில் ஒருவர்.
கிழக்கு மும்பையின் புறநகர்ப் பகுதியான காட்கோபரில் வளர்ந்த திலக் மேத்தா, அப்போது 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஒரு வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து தனது பெற்றோரின் அனுமதியுடன் போரிவலியில் உள்ள தன்னுடைய மாமாவின் வீட்டுக்கு (25 கி.மீ.) இரண்டு நாள் விடுமுறையைக் கழிக்கப் புத்தகப் பையுடன் சென்றடைந்தான்.
திங்கள் காலையில் பள்ளியில் புத்தகப்பையைத் திறந்தபோதுதான் தனது பாடப்புத்தகங்களில் இரண்டை மாமா வீட்டிலேயே மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அன்றிரவு வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பிய தன்னுடைய தந்தையைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல், ஒரு தனியார் ‘பிக்கப் டெலிவரி’ நிறுவனத்தை நாடினான்.
இரண்டு புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுக்க அவர்கள் கேட்ட சேவைக் கட்டணம், அந்தப் புத்தகங்களின் விலையைவிட இரண்டு மடங்கு அதிகம். தவிர அதே நாள் ‘டெலிவரி’யும் சாத்தியமில்லை என்று அவர்கள் சொல்லிவிட, திலக்கின் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது!