

புத்தாண்டில் புதிய தீர்மானங்கள் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் அநேகம். அந்த வகையில் இளைஞர்கள் பலரும் புதிய தீர்மானங்களை எடுக்க தவறுவதில்லை. அப்படியே தீர்மானித்தாலும் அதைப் பின்பற்றுவதில் சவால்களும் இருக்கின்றன. சரி, புத்தாண்டு தீர்மானத்தை எடுக்கிறோமோ அல்லது பின்பற்றுகிறோமோ என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால், புத்தாண்டு தீர்மானம் எடுப்பது சரியா, தவறா?
புத்தாண்டுத் தீர்மானம் எப்போதும் உளவியல்ரீதியாக நேர்மறையாக அணுக வைக்கும். தீர்மானங்களை முழுமையாகக் கடைப்பிடிக்காவிட்டாலும், தீர்மானம்எடுப்பது உணர்வுரீதியாக ஊக்கப்படுத்தும். நம்பிக்கை யுள்ளவராகவும் தன்னம்பிக்கைமிக்கவராகவும் உணர வைக்கும். ஒரு விஷயத்தை முயன்று பார்த்து, அதைக் கைவிடுவது என்பது எதிர்மறையானதோ தோல்வியோ அல்ல. தீர்மானங்களின் முடிவுகள் எப்படி இருந்தாலும், அவை குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதைப் புரிந்துகொண்டால் போதும். புத்தாண்டுத் தீர்மானம் அந்த ஆண்டை இனிப்பாகவே ஆக்கும்.