

“இந்தக் காலத்துப் பிள்ளைங்க இப்படித்தான்.. என்னத்தச் சொல்றது?” - இன்றைய தலைமுறையைப் பற்றிச் சொல்லும் கடந்த தலைமுறையினர் வைக்கும் பொதுவான விமர்சனம் இது. ஆனால், எனக்கு ஒரு கேள்வி.
இந்தக் காலத்துப் பிள்ளைகள் சரியில்லை என்று சொல்கிறோமே, அவர்களை வளர்த்தது யார்? நீங்களும் நானும்தானே? ஒரு குழந்தையின் பழக்கவழக்கங்களையும் ஒழுக்கத்தையும் தீர்மானிப்பதில் பெற்றோர், பள்ளி, நண்பர்கள், சமூகச் சூழல் எனப் பல காரணிகள் இருக்கின்றன.
அப்படியிருக்க, எல்லாப் பழியையும் பிள்ளைகள் மீதே போட்டுவிடுவது என்ன நியாயம்? இந்தக் காலத்துப் பிள்ளைகளிடம் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதற்கான தீர்வை அவர்களிடம் மட்டுமே தேடாமல், குழந்தை வளர்ப்பிலிருந்தும் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏன் ஃபிரெண்ட் எல்லை?
தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, குடும்பங்களின் அளவு படிப்படியாகச் சுருங்கிவிட்டது. ஒரு குழந்தை, இரண்டு குழந்தைகள் என்று பல குடும்பங்கள் மாறிவிட்டன.
இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், சில குடும்பங்களில் குழந்தைகள் மீதான அன்பு, அளவுக்கு மீறிய மிகைவிருப்பமாக (Obsession) மாறிவிடுகிறதோ என்கிற கேள்வி இருக்கிறது. நம்முடைய ஆசைகள், கனவுகள், நிறைவேறாத விருப்பங்கள் அனைத்தையும் குழந்தைகள் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறோம். இதில் இன்னொரு புதிய கலாச்சாரமும் உருவாகியிருக்கிறது.