

ஒரு காலத்தில் வீட்டுக்கு யாராவது புதியவர்கள் வந்தால், அவர்களை வரவேற்பறையைத் தாண்டி அழைத்துச் செல்ல மாட்டார்கள். புதிதாக ஒரு பொருள் வாங்கியிருந்தால்கூடக் காட்ட மாட்டார்கள். ஏனென்றால், ‘கண்ணு பட்டுடும்’, ‘திருஷ்டி விழுந்துடும்’ என்று சொல்லாமல் இருப்பார்கள்.
திருஷ்டி என்பது மூடநம்பிக்கைதான். ஆனால், அந்த நம்பிக்கையின் பெயரிலாவது தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களைச் சிலர் பாதுகாத்தார்கள். இன்றைக்கோ நிலைமை தலைகீழ்.
வீட்டுக்கு வந்தவர் களையே வரவேற்பறையோடு நிறுத்திய நாம், இப்போது வீட்டுக்கே வராத லட்சக்கணக்கான மனிதர்களுக்கு வீட்டின் ஒவ்வோர் அறையையும் சுற்றிக்காட்டுகிறோம். அதன் பெயர், ‘ஹோம் டூர்’. “இது எங்க பெட்ரூம்.. இது எங்க பால்கனி... இது எங்க டிரெஸ்ஸிங் ரூம்” என்று நாமே சுற்றுலா வழிகாட்டியாக மாறிவிடுகிறோம். இங்கே நாம் பேசவேண்டியது தனியுரிமையைப் (Right to Privacy) பற்றி.
தனியுரிமை
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, தகவல்களை யாரிடம், எவ்வளவு பகிர்ந்துகொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமைதான் தனியுரிமை. இன்று நம்முடைய மகிழ்ச்சி, கொண்டாட்டம், பயணம் என்று எல்லாவற்றையும் இணையத்தில் பகிர்ந்துகொள்கிறோம். சிலர் தாங்கள் கருவுற்றிருப்பதை அறிவிப்பதில் தொடங்கி ஸ்கேன் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனைகள், பிரசவம்வரை அனைத்தையும் வீடியோவாக வெளியிடுகிறார்கள். சிலர் அனுபவங்களைப் பகிர்கிறார்கள்.