

ஒரு கோளில் ஒரு ஏலியன் இருந்தது. அது பூமியைச் சுற்றிப் பார்க்க விரும்பியது. பூமியிலிருந்து திரும்பி வந்தாலும், எதையோ நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டே இருந்தது. ஒருநாள் அதன் அம்மா, “ஏன் சிரிச்சுகிட்டே இருக்குற?” என்று கேட்டது. அதற்கு ஏலியன் இப்படிச் சொன்னது: “முன் தலையில் முடியைச் சிறிது மழித்துக்கொள்ளும் பழக்கம் இந்தக் கால இளைஞர்களிடையே வெகு வேகமாகப் பரவிவருகிறது.
எவ்வளவுக்கு எவ்வளவு அகற்றிக்கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இளம் பெண்கள் ஈர்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, இக்கால இளைஞர்கள் வெகு வேகமாக தங்கள் முன்னந்தலை முடியை அகற்றி வருகின்றனர்.
இதில் இயற்கையாகவே முடி இல்லாத தலையைக் கொண்ட இளைஞர்களுக்கு பெருத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.” இப்படி ஒரு காலக்கட்டம் வந்தால்தான் எனக்குக் கல்யாணம் ஆகும் போல என்று ஒரு கதாபாத்திரம் வருத்தப்படுவதுபோல் முன்பு ஒரு சிறுகதையில் எழுதியிருந்தேன்.
இதைப் படித்துவிட்டு ஓர் இளைஞர் சொன்னார், “எனக்குக் கல்யாணம் ஆகாவிட்டால்கூடப் பரவாயில்லை, வழுக்கைத் தலைக்காரர்களைக் கேலி செய்கிறார்கள். தாங்க முடியவில்லை, எவ்வளவு நேரம்தான் அது என்னைப் பாதிக்காததுபோல் நடிக்க முடியும்?” என்று கேட்டார்.
உருவக்கேலி ஒருவரைச் சிதைத்து தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும் ஆற்றல் உடையது. அடுத்தவருக்கு முன்னால் கேலிப் பொருளாகும்போது, கண்டிப்பாகத் தோன்றத்தான் செய்யும், ‘எனக்கு மட்டும் ஏன்?’ பெறும் வலிகளில் கேவலமான, மட்டகரமான ஒன்று உருவக்கேலி வலி.