

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியில் உங்கள் முதல் மேட்ச். பார்வையாளர்கள் உற்சாகப் படுத்துகிறார்கள். உங்களின் கண் நிறைகிறது. சொந்த ஊர், சொந்த அணி, வெறித்தனமாகப் பயிற்சி, நிறைய தியாகங்கள். இதோ, சேப்பாக்கத்தில் நீங்கள்!
இப்போது வைபவ் சூரியவன்ஷி பேட்டிங். காலையிலிருந்தே ஹிப்ஹாப் தமிழாவின் ‘அவ ஆரா பத்துக்குப் பத்து, டக்குனு பாத்தா ஆவுது ஜெர்க்கு..’ என்கிற கருத்தாழம் மிக்க (!) வரிகள் காதில் விழுந்து மண்டைக்குள் ஓடியதில் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
‘ஒரு ரன், ரெண்டு ரன்.. எல்லாம் தெரியாத அப்பாவியாவே வாழ்ந்துட்டேனுங்ண்ணா..’ என்றவாறு சூரியவன்ஷி அடித்த அடியில் பந்து உங்கள் கையை நோக்கி வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே நர்ஸிடம் ‘ஸ்கோர் என்ன?’ என விசாரிக்கும் என்பதால், அந்த கேட்ச்சையும் பிடிக்கும் ஆற்றலுடையது. அவ்வளவு எளிதான கேட்ச்!
ஈசியான கேட்ச்
‘இவ்வளவு ஈசியான கேட்ச்சை என் வாழ்க்கையிலேயே பிடித்தது கிடையாது. இதோ.. இப்போது பார்த்து, ‘அடிச்சது லக்கு.. ஆரா பத்துக்குப் பத்து’ என்று உங்களின் கவனம் சற்றே சிதைந்ததில் மிகமிகமிக எளிதான அந்த கேட்ச்சை நழுவ விட்டுவிட்டீர்கள்.
அப்புறம் சூரியவன்ஷி நிதானமாக 15 பந்தில் 75 ரன்கள் அடித்ததில், இறுதியில் நீங்களே அரங்கை விட்டு வெளியே போய் விழுகிறீர்கள். ஏன் அந்த முக்கியமான தருணத்தில் முட்டாள்தனமாக நடந்துகொண்டேன்? இவ்வளவு படித்திருக்கிறோம்; பட்டறிந்திருக்கிறோம்.