

‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ இக்கேள்வி சற்றே ஆபத்தானது. இக்கேள்வியை எழுப்புகிறீர்கள் என்றால், நிச்சயம் சற்றே நிராதரவான நிலை, மனஅழுத்தம், அவநம்பிக்கையில் இருக்கிறீர்கள் என்று பொருள்.
எனவே, இந்தக் கேள்வி எழுப்பும் பிரச்சினைகள் அதிக நேரம் நீடித்தால், அது ஆழமான உடல், மனம் சார்ந்த வேறு பல பிரச்சினைகளுக்குக் கொண்டுசெல்லும். சரியாகக் கையாளாவிட்டால், அடுத்து நேரும் கணங்கள் உங்கள் கையிலிருந்து நழுவிச் சென்று விடும். இதை அற்பப் பிரச்சினையாக்குவதும், ஆயுள் முழுக்கப் பிரச்சினை ஆக்குவதும் உங்களிடமே உள்ளது.
இப்படி ஒரு கணம் வாய்த்துவிட்டால் முதலில் பதற்றப்படாதீர்கள். எவ்வளவு புலம்பினாலும் கடந்த காலத்துக்குள் சென்று நிகழ்ந்ததை மாற்ற முடியாது. ஒரு பிரச்சினை உங்களிடம் வருகிறது என்றால், அதற்கு உங்களால் தீர்வு காண முடியும் என்றுதான் அர்த்தம். நீங்கள்தான் அதைத் தீர்க்க வேண்டும், தீர்க்கவும் முடியும்.
உதவிகள், ஆலோசனைகள் கிடைத்தால் நல்லதுதான். ஆனால், அதற்காக நீண்ட நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தால் பிரச்சினையின் பரிணாமம் மாறிக்கொண்டே இருக்கும். அப்படியே ஆலோசனைகள் கிடைத்தாலும் அப்படி ஆடு, இப்படி ஓடு என்று நீங்கள்தான் ஆடுகளத்தில் பந்துகளைச் சந்தித்தாக வேண்டும். பயிற்சிகள் வெளியேதான் நிற்பார்கள்.
எனவே, அந்தப் பிரச்சினை உங்களுக்குப் பழக்கமான ஒன்றுபோல் நடந்துகொள்ளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உங்களுக்கே என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்துவிடும். முடிந்தால் ஒரு தேநீர் அருந்திவிட்டு யோசியுங்கள். இல்லை, தனியாக, காலாற ஒரு நடை போய் வாருங்கள்.