

“எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டிலே பிழை இருக்காது என்று அர்த்தமா?” என்று சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ படத்தில் ஒரு வசனம் உண்டு. “உங்க பாட்டுல மிஸ்டேக் இருக்குதுங்க..” என்று சிவபெருமானிடம் சொல்லும்போது அவர், “பாத்துப் பாத்து ஒவ்வொரு வார்த்தையும் போட்டிருக்கேன்... என் ஸாங்ல குறை சொல்லும் அளவு நீங்கள்லாம் பெரிய ஆள்களாயிட்டீங்களா?” என்று டென்ஷனாகும்போது நக்கீரர் மேலே உள்ள வசனத்தை சொல்வார்.
இந்த வசனத்தைக் கொஞ்சம் மாற்றி என் ஆசிரியர் ஒருவர் எங்களைக் கலாய்ப்பார். எப்படி? காவ்யா நன்றாகப் படிப்பாள். வீட்டிலும் குடும்பத்துக்கு முடிந்த அளவு உதவிகளைச் செய்வாள். மொத்தத்தில் யாரையும் துன்புறுத்தாத, அதிர்ந்து பேசாத, எல்லாரையும் சிநேகிக்கிற அனைவருக்கும் பிடித்த பெண்ணாக இருந்தாள். சிலரைப் பார்த்தால், இவளுக்கெல்லாம் படித்து முடித்த உடன் வேலை கிடைத்துவிடும், இவளுக்கெல்லாம் கல்யாண வாழ்க்கை பிடித்தபடி நடந்து, அதது நடக்க வேண்டிய வயதில், அந்தந்தக் கட்டத்தில் நடந்து, வாழ்வென்னும் ஸ்கூட்டி நகர்ந்துகொண்டே இருக்கும் என்றெல்லாம் தோன்றுமல்லவா? அப்படி ஒருத்தி இவள்! சாது இனத்தினள்!
இப்படி நம்மில் நிறைய பேர் இருக்கிறோம். எப்போதுடா லீவ் வரும் என்று வாரத்தின் வேலை நாள்களை ஓட்டி, பஜ்ஜிக்கென நிர்ணயிக்கப்பட்ட கடைகளில் பஜ்ஜி தின்று, வார இறுதியில் மட்டன் சாப்பிட்டு, அவரவருக்கான சினிமா பார்த்து, அவரவருக்கான நண்பர் சூழ்ந்து, அவரவருக்கான காற்றைச் சுவாசித்து, யார் வம்புதும்புக்கும் போகாமல் ஓர் எளிய ஜீவிதம்.
சரி, இருந்துவிட்டுப் போங்கள். ஆனால், ‘எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டிலே பிழை இருக்காது’ என்பது போல, ‘யார் வம்புக்கும் போகாமல் இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் வராது என்று அர்த்தமா?’ என்பார் மேலே சொன்ன ஆசிரியர். தீடீரென எங்கிருந்தோ சுற்றுலாவுக்கென வந்த ஒரு வாகனம் யார் வம்புக்கும் போகாத காவ்யாவின் ஸ்கூட்டியை ஒரு தட்டுதட்டி, இடித்து விட்டால்? அதுவும் அவள் இண்டர்வியூவுக்குப் போகும் நாளில்? இது போல நிறைய ‘திடீர்’களைப் பார்க்கிறோம்.