வாழ வைக்கும் சென்னைக்கு ஜே..! | சென்னை 387

வாழ வைக்கும் சென்னைக்கு ஜே..! | சென்னை 387
Updated on
2 min read

சென்னைக்குச் செல்வது என்பது பலருக்கும் கனவு என்றால், சென்னையிலேயே செட்டிலாவது பெருங்கனவாக இருக்கும். அப்படி சென்னைவாசிகள் ஆனவர்கள் ஏராளம்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னையை நோக்கி இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் நாள்தோறும் படையெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். படிப்பு, வேலைக்காக சென்னை வரும் இளைய தலைமுறையினர் சென்னையைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

பூமிகா.மு, இதழியல் மாணவி

சொந்த ஊர் வால்பாறை. கல்லூரிப் படிப்புக்காக வீட்டில் அடம்பிடித்து சென்னைக்கு வந்தேன். சென்னை எனக்கு நிறையப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது.

இதுவரை என் ஊரையும் அப்பகுதி மக்களின் வாழ்க்கைமுறையையும் மட்டுமே பார்த்துவந்த எனக்கு, சென்னை மக்களையும் அவர்களின் அன்றாட வாழ்க்கைமுறையாக அமைந்திருக்கும் வேலைகளையும் போராட்டங்களையும் என் கேமராவில் பதிவுசெய்யத் தொடங்கினேன்.

பலதரப்பட்ட மக்களின் போராட்டங்களை கேமரா வழியாகப் பதிவுசெய்திருக்கிறேன். அதிக வெயில் வாட்டினாலும் மழை பொழிந்து வெள்ளம் வந்தாலும், இந்த ஊர் உடனடியாக மீண்டுவிடுவது பிரமிக்க வைக்கிறது.

சலேஷ் தீபக், திரைத் துறை

சொந்த ஊர் ராமேஸ்வரம். அப்பாவின் வேலை காரணமாக சென்னைக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னுடைய திறமையை மட்டும் பார்த்து எனக்கு வேலை கிடைத்துள்ளது.

எந்தவொரு வேலையாக இருந்தாலும் முழு உழைப்பைச் செலுத்தி வேலை செய்பவர்களை, இந்த ஊர் கைவிடாது. வெளிநாடுகளில் இருப்பதைப் போல மாற்றுத்திறனாளிகள், முதியோர் என அனைவருக்குமான பொதுஇடங்கள் சென்னையில் இல்லை.

அவ்வப்போது தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் பழக்கம் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறை, லிப்ஃட் வசதிகள் எல்லாம் அண்மைக் காலமாகச் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பொது இடங்களிலும் இந்த மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும்!

உமா பார்வதி, ஓவியர்

இரவு பகல் பாராமல் பரபரப்பாக இயங்கும் ஊர் சென்னை. என் சொந்த ஊர் சிவகங்கை. அங்கே எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் யாராவது கவனித்துக்கொண்டே இருப்பார்கள். நாம் செய்யும் விஷயங்களைப் பற்றிக் கருத்துச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், சென்னையில் அது குறைவு.

இந்த ஊரில் இருக்கும்போது பாதுகாப்பாகவே உணர்கிறேன். சென்னை என்னைப் பல நேரம் சுதந்திரமாக உணர வைத்திருக்கிறது. தொடக்கக் காலத்தில் இங்கே தனியாக ‘சர்வைவ்’ செய்ய கஷ்டமாக இருந்தாலும், மெல்ல ‘அடாப்ட்’ செய்துகொள்ளலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தைவிட்டுப் போய்விடலாம் என்றுகூட நினைத்திருந்தேன். ஆனால், அந்த எண்ணத்தை சென்னை மாற்றிவிட்டது. ஓவியக் கலைஞரான எனக்கு ஏற்ற இடம் சென்னைதான். இங்கேயே என் கரியரை மெருகெற்றிக்கொண்டு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு!

ர. முகமது இல்யாஸ், ஆய்வு மாணவர்

சென்னைக்கு 13 ஆண்டு களுக்கு முன்பு வந்தபோது நான் ஒரு ‘அவுட்சைடர்’தான். கோவையில் நான் வசிக்கும் பகுதி கிராமமும் கிடையாது, நகரமும் கிடையாது. ஊரில் பெரும்பாலும் எல்லாரும் பரிச்சயமாகனவர்களாக இருப்பார்கள்.

சென்னையில் அப்படி இல்லை. இது எனக்கு ஒரு சுதந்திர உணர்வைத் தந்தது. சென்னை முழுமையான பன்முகக் கலாச்சாரம் கொண்ட இடம். பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்கிறார்கள். பல மொழிகளைப் பேசுகிறார்கள். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.

சமூகத்தில் எந்தவிதமான பதற்றமும் பிரச்சினையும் இல்லாமல் வாழ்வதே இந்த நகரின் தன்மை. இதுதான் நான் இன்னும் விரும்புகிற சென்னை. 200 ஆண்டுகளாகவே சென்னை அப்படித்தான் இருக்கிறது.

ஆனால், இன்னும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் நிலவவே செய்கிறது. குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினருக்கு வீடு இல்லை எனச் சொல்கிறார்கள். இது மாற வேண்டும்.

வாழ வைக்கும் சென்னைக்கு ஜே..! | சென்னை 387
முப்பதாம் ஆண்டில் முஸ்தபா...! முஸ்தபா...!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in