

தமிழ் சினிமா இசையில் நட்பைக் கொண்டாடும் பாடல்கள் எத்தனையோ வந்திருக்கலாம். ஆனால், கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாளை, பிரிய மனமில்லாமல் பிரிந்துசெல்லும் நண்பர்களின் வலியை, நெஞ்சில் தைத்த முக்கியமான பாடல், ‘முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா...’தான்.
1996 ஆகஸ்ட் 23இல் கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் ஒலித்த இந்தப் பாடலுக்கு வயது 30 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், ஜென் ஸீ யுகத்திலும்கூட எந்தக் கல்லூரியின் ‘ஃபேர்வெல் டே’ நிகழ்வும் இந்தப் பாடல் இல்லாமல் நிறைவடைவதில்லை.
அறுபதுகளில் வெளியான ‘ரத்தத் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே...’ என்கிற பாடலும் கல்லூரி ‘ஃபேர்வல் டே’ பற்றிய பாடல்தான். இந்தப் பாடல் வெளியானதற்குப் பிந்தைய காலத்தில், அந்தப் பாடல் கல்லூரி நண்பர்களைக் கட்டிப்போட்டு பாட வைத்ததா என்பதை முந்தைய தலைமுறையைக் கேட்டால்தான் தெரியும்.
ஆனால், தொண்ணூறுகளின் மத்தியில் வெளியான ‘முஸ்தபா... முஸ்தபா...’ பாடல் கல்லூரி நண்பர்களின், இளைஞர்களின் தேசியக் கீதம்போல ஆனது. அடுத்தத் தலைமுறையினர் அப்பாடலை வேறு வடிவத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.
அந்த ஹம்மிங்
கல்லூரியில் பூக்கும் நட்பைப் பற்றியும் நண்பர்களைச் சுற்றியும் இப்பாடல் காட்சிகளாக எடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்த விதம் கல்லூரி நண்பர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.