

மே மாத வெயில் மண்டையைப் பிளப்பதற்கு முன்னால் காலையிலேயே புறப்பட்டோம். சிறுபடகைச் செலுத்தும் (kayaking) ஆர்வத்துடன் மாமல்லபுரம் அருகேயுள்ள கோவளத்தைச் சென்றடைந்தோம். கோவளத்தில் உள்ள கடல் கழிமுகப் பகுதியில் சிறுபடகு செலுத்தும் சேவைகளை ‘பே ஆஃப் லைப்’ அமைப்பு வழங்கிவருகிறது.
தமிழ்நாட்டின் முதல் நீலக்கொடி கடற்கரை கோவளம். வழக்கமான கடற்கரைகளைவிட இங்கு அடிப்படை வசதிகள் சற்று மேம்பட்டிருக்கின்றன. அதேநேரம் கட்டணம் செலுத்தித்தான் கடற்கரைக்குச் செல்ல முடியும். அடும்பு, கோழியவரை போன்ற படர்கொடிகள், செடிகள் கடற்கரையில் முளைத்திருந்தன.
எங்களுக்கான பயிற்சியாளர் மோத்தீஸைக் கண்டடைந்தோம். தண்ணீரில் இறங்குவதற்கு முன் அனைவரும் மிதவை அங்கியை (லைஃப் ஜாக்கெட்) அணிய வேண்டும். பிறகு ஒவ்வொருவர் கையிலும் துடுப்பைக் கொடுத்தார் மோத்தீஸ். ஞெகிழியால் ஆன சிறுபடகில் ஏறினோம்.
ஒரு மிதவையில் இருந்துகொண்டு தண்ணீரைத் தள்ளுவதன் மூலம் நாம் முன்னேறிச் செல்லலாம். நேராகச் செல்வது என்றால் இரு புறமும் துடுப்பைப் போட வேண்டும். நீரோட்டத்தாலோ அல்லது தவறாகத் துடுப்பிட்டாலோ படகு ஒரு பக்கமாகத் தள்ளப்பட்டுக்கொண்டே போனால், அதற்கு எதிர்ப்புறம் துடுப்பு போட்டால், நீர்நிலையின் நடுப்பகுதிக்கு வந்துவிடலாம். இந்த நுட்பத்தைச் சொல்லிக்கொடுத்த பிறகு தண்ணீரில் படகுகளை இறக்கிவிட்டார்.
நீச்சல் தேவையில்லை
கோவளத்தில் கடல்நீர், 3-3.5 அடி மட்டுமே ஆழமுள்ள கழிமுகத்தை உருவாக்கியிருக்கிறது. இதுபோன்ற இடங்களில் நடைபெறும் நீர் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் எந்தப் பயமும் இல்லாமல் நீரில் முன்னேறிச் சென்றோம்.