

தேவன் ஏகாம்பரம், சுஷா
உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்களின் சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில், அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2027ஆம் ஆண்டுக்கான 69ஆவது கிராமி விருது விழா, பிப்ரவரி 7இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற உள்ளது.
இதில், சிறந்த உலக இசைப் (Best Global Music Performance) பிரிவின் குறும்பட்டியலுக்கு முதல்முறையாகத் தமிழ்ப் பாடல் ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாரதி பாடல்
திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான தேவன் ஏகாம்பரம், பாடகி சுஷா (சுபிக் ஷா ரங்கராஜன்) ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள ‘வருவாய்..’ என்கிற சுயாதீன இசைப்பாடல்தான் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதியின் வரிகள் கொண்ட இந்தப் பாடலுக்கு நவீன இசை வடிவம் கொடுத்து கர்னாடக இசையின் பாரம்பரியத்தையும் சமகால இசைக்கூறுகளையும் இணைத்துள்ளனர், இசைக் குழுவினர். ‘வருவாய்’ பாடலின் இசையமைப்பு, இசைக்கோப்பு, தயாரிப்புப் பணிகளை தேவன் மேற்கொண்டுள்ளார்.
சுஷா பாடலைப் பாடியுள்ளார். பிரபல இசைக் கலைஞர் அனில் னிவாசன் பியானோவும் பிரகாஷ் சன்டேக் கிதாரும் இசைத்துள்ளனர். பாரதியாரின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் தேவன் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, 2026 ஜூனில் ‘வருவாய்’ பாடல் உருவாக்கம் நடைபெற்றுள்ளது.