

வாசிப்பதில் பலவிதங்கள் இருக்கின்றன. வாசிப்பை வகைப்படுத்துவதிலும் பல வழிகள் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியால் புதிய வகை வாசிப்பும் அறிமுகமாகி இருக்கிறது. வழக்கமான வாசிப்பு வழிகளில் நுனிப்புல் மேய்வதுபோல படிப்பது ஒரு வகை.
நுண்மாண் நுழைபுலம் காண்பதுபோல, ஆழமாக வாசிப்பதும் ஒரு வகை. நடைமுறைத் தேவைக்காக முக்கியப் பகுதிகளை மட்டும் கண்டறியும் வகையில் அங்கும் இங்கும் பார்வையை மேய்ந்தபடி வாசிப்பது இன்னொரு வகை. வேகமாக வாசிப்பதும் அப்படித்தான். அதிவேக வாசிப்புக்கு உதவும் இணையச் சேவைகளும்கூட இருக்கின்றன.
இப்போது வாசிக்காமலேயே வாசிப்பதைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாத்தியமாக்கி இருக்கிறது. கட்டுரையா, புத்தகமா, ஆய்வு முடிவா? எதுவாக இருந்தாலும், மூலத்தை வாசிக்காமல் அதன் சுருக்கத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
உலக நடப்புகளையும் செய்திகளையும்கூடச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். சுருக்கச்சேவைகள் ஏற்கெனவே இருப்பவைதான். மாணவர்களுக்கான இலக்கிய வாசிப்புகளைச் சுருக்கக் குறிப்புகளாகத் தரும் வழிகாட்டி நூல்கள் கல்வி பரப்பில் வழக்கமானவை.
முக்கிய நூல்களைச் சுருக்கக் குறிப்புகளாக வழங்கும் இணையதளங்களும் இருக்கின்றன. பிரபலமான அபுனைவுப் புத்தகங்களின் சாரம்சத்தைச் சுருக்கமாக வழங்கும் ‘பிளின்க்லிஸ்ட்’ போன்ற சேவைகளும் இருக்கின்றன.
சுருக்க வசதி
எனினும், இந்தச் சுருக்க வசதிகள் எல்லாமே வழிகாட்டுதலுக்கானவையாகக் கருதப்படுகின்றனவே தவிர, வாசிப்புக்கான மாற்றாக அல்ல. செய்திகளைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வது, பயனாளிகளுக்கு முக்கியமான செய்தியைக் கண்டறிந்து விரிவாகத் தெரிந்துகொள்ள முடிவதற்கான தேர்வு எனும் அடிப்படையில்தான்.