

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மட்டும் மையப் புள்ளியாக இருக்கவில்லை. இரண்டு இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் சென்னை அணி, தோனி சார்ந்து பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள்.
தோனி பெறாத பரிசு! - சென்னை அணியின் ‘ஹோம் கிரவுண்’டான சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பல முறை இந்த அணி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. தோனியின் மறக்க முடியாத சில கிரிக்கெட் தருணங்களும் இந்த மைதானத்தில் அரங்கேறியிருக்கின்றன. மஞ்சள் படை ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் தோனி அடிக்கும் மெகா சிக்சர்கள் அதிரடி ரகம்.
இப்படி தோனிக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பின் சாட்சியாக சேப்பாக்கம் மைதானம் திகழ்ந்துவருகிறது. அதை உணர்த்தும் வகையில் சேப்பாக்கம் மைதானத்தின் மினியேச்சர் வடிவத்தை தோனிக்குப் பரிசளித்திருக்கிறார் சென்னையில் வசிக்கும் பஞ்சாபியான ஜப்டெஜ் அலுவாலியா. மினியேச்சர் வடிவத்தை வழங்க வேண்டும் என்ற பஞ்சாபி ரசிகரின் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணரான சிவக்குமார்.
இந்தப் பரிசைக் கண்டதும், “வாழ்நாளில் இப்படியொரு வித்தியாசமான பரிசு எனக்குக் கிடைத்ததில்லை” என தோனியே உருகும் அளவுக்கு நெகிழ்ந்திருக்கிறார். இந்த மினியேச்சர் வடிவத்தை உருவாக்கும் யோசனை எப்படி உதித்தது?
“தோனிக்கு ஒரு வித்தியாசமான பரிசு வழங்க வேண்டுமென்ற திட்டத்துடன் என்னை அணுகினார் ஜப்டெஜ் அலுவாலியா. அதற்காக 3டி மினியேச்சர் மாடலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை உருவாக்க முடிவு செய்தோம். ஒவ்வொரு பாகமாக முதலில் 3டி டிசைன் செய்து 3டியில் அச்செடுத்தோம். பிறகு ஒவ்வொரு பாகத்தையும் மற்ற பாகங்களுடன் ஒன்றிணைத்து ஒட்டினோம்.
இரண்டு வார உழைப்பில் சுமார் ரூ. 4 லட்சம் செலவில் உருவானதுதான் இந்த மினியேச்சர் வடிவம். இந்த 3டி மினியேச்சர் வடிவத்தைக் கண்ணாடிப் பெட்டியில் முறையாகப் பாதுகாத்தால் பல ஆண்டுகள் சேதாரமின்றி நிலைத்திருக்கும்” என்கிறார் மினியேச்சர் மைதானத்தை வடிவமைத்த சிவக்குமார்.
சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த தோனியைச் சந்தித்து இந்தப் பரிசை ஜப்டெஜ், சிவக்குமார் வழங்கினர். பரிசைப் பார்த்து வியந்த தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல, இந்தப் பரிசை ராஞ்சிக்கு எடுத்து வரும்படி ஜப்டெஜ், சிவக்குமாருக்கு அன்புக் கட்டளையும் போட்டிருக்கிறார் தோனி.
ரஜினி பாடல்களும் தோனியும்: ஒரு பக்கம் இரண்டு ரசிகர்கள் தோனிக்கு மைதானத்தைப் பரிசாக வழங்க, இன்னொரு பக்கம் சென்னை அணியின் டி.ஜெ. ஸென்னின் பாடல் ஒலிபரப்புகளும் சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்தன. தோனி களமிறங்கும் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாக இருக்கக்கூடும் என்பதால் வழக்கத்தைவிட அதிகமாகவே ரசிகர்கள் அவரைக் கொண்டாடிவருகிறார்கள்.
போட்டிகளின்போது மைதானத்திலுள்ள ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது சூப்பர் ஹிட் பாடல்களை ஒலிக்கவிடுவது வழக்கம். இந்த ஆண்டு தோனி களமிறங்கும்போது ஒலித்த பாடல் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. ஒவ்வொரு முறையும் தோனி பேட் செய்யக் களமிறங்கும்போதும் சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது. அதற்கு முக்கியக் காரணம், மைதானத்தில் டி.ஜே ஸென் தேர்வு செய்த பாடல்கள்.
‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ தொடங்கி ‘பாட்ஷா’ படத்தின் தீம் மியூசிக், ‘படையப்பா’ படத்தின் ‘சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறு’, கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘டூஃப்பான்’, ‘பத்து தல’ படத்தின் ‘நீ சிங்கம்தான்’ என தோனிக்காக ஒலித்த அத்தனை பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடினர்.
டி.ஜே ஸென், வி.ஜே. ஸ்பாரோ, தொகுப்பாளர் அருண் என மூவர் அடங்கிய குழுதான் சேப்பாக்கம் மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சத்துக்கான பொறுப்பு. டி.ஜே.வுக்கான பாடல்களைத் தேர்வு செய்தது எப்படி? டி.ஜே ஸென் என்ற செந்தில்குமாரிடம் பேசினோம்.
“ஒவ்வொரு வீரருக்கும் குறிப்பிட்ட சில பாடல்களை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருந்தோம். அந்தப் பாடல்களுக்கான காப்புரிமைகளை ஐபிஎல் நிர்வாகம் எங்களுக்குப் பெற்றுத் தரும். தோனிக்கென சில பாடல்களைத் தேர்வு செய்தோம். இதில் ‘பாட்ஷா’ இசையும் பாடலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக அந்தக் காணொளி வைரலானது.
அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களது பாடல் பரிந்துரைகளை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர். இந்த சீசனில் தோனி, ரஜினி படப்பாடல் காம்போதான் மிகப்பெரிய ஹிட்டானது. தோனிக்கு மட்டுமல்ல ஷிவம் துபேவுக்காக ‘சூறாவளி கிளம்பியதே’, ரவீந்திர ஜடேஜா அவுட்டாகி செல்லும்போது, அடுத்து தோனிக்காக ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள்.
அதற்காக ஜடேஜாவுக்காக ‘மன்னிப்பாயா..’ பாடலையும் ஒலிபரப்பினோம். இப்படி ஒவ்வொருவருக்கும் நேரத்துக்கு தகுந்தாற்போல் பாடல்களை ஒலிக்கவிட்டோம். மைதானத்தில் தமிழ்ப் பாடல்கள் ஒலிப்பது வீரர்களுக்குப் புரியாது என்றாலும் ரசிகர்களுக்காக விருந்து படைத்திருக்கிறோம்” என்கிறார் டி.ஜே. ஸென்.
இவ்வளவும் தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால்தான். ஒருவேளை அடுத்த சீசனிலும் அவர் விளையாடினால், இவற்றையெல்லாம் மீண்டும் காண நேரிடலாம்.