

இரவு வேளையில் வானத்தை ரசிக்க யாருக்குத்தான் பிடிக்காது? அழகான நிலாவும் வானத்தில் இறைத்தாற்போல் ஜொலிக்கும் நட்சத்திரங்களும் இயற்கை அற்புதங்கள். அந்த ரம்மியமான இரவுக் காட்சிகளை ஒளிப்படங்கள் எடுக்க என்றைக்காவது நீங்கள் முனைந்திருக்கிறீர்களா? ஆனால், அப்படிப்பட்ட அற்புதமான ஒளிப்படங்கள் எடுப்பதைத் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாற்றி வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ஆகாஷ் ஆனந்த்.
வெறும் கண்கள் போதும்: விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு, விளம்பரத் துறையில் வேலை என்றிருந்த ஆகாஷுக்கு 2016இல் வானியல் ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வம் துளிர்த்திருக்கிறது. நிலவின் பல்வேறு தோற்றங்கள், பால்வெளி மண்டலம், நட்சத்திரங்கள், வானியல் அற்புதங்கள் எனப் பலவற்றைப் படமெடுத்திருக்கும் இவருடைய ஒரு படைப்பு பிரபல ஸ்பேஸ்.காம் தளத்தில் சிறந்த 100 வானியல் ஒளிப்படங்களில் ஒன்றாக 2016இல் பட்டியலிடப்பட்டது. வெகுதொலைவில் இருக்கும் வானியல் காட்சிகளை ஒளிப்படம் எடுப்பது மிகவும் கடினம் என்கிற பிம்பத்தை ஆகாஷ் உடைத்திருக்கிறார்.
“இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒளி மாசு அதிகம். ஒளி மாசுபாட்டால் ஒளிப்படங்கள் எடுப்பதில் சிரமம் உண்டு. இருப்பினும் கிராமப்புறங்கள், மலைப் பிரதேசங்களுக்குச் சென்றால் இரவு நேர வானத்தை அழகாகப் படம் பிடிக்கலாம்.
வானியல் காட்சிகளை ரசிக்க நவீன பைனாகுலர் தேவையில்லை. வெறும் கண்களாலேயே ரசிக்கலாம். கும்மிருட்டாக இருக்கும் இடங்களில் நட்சத்திரங்களையும் கோள்களையும் வெறும் கண்களில் பார்த்து ரசிக்கலாம். திறன்பேசி கேமராவிலும் படம் பிடிக்கலாம்.
வானியல் ஒளிப் படங்களை எடுக்கவே சில செயலிகளும் வந்து விட்டன. இதன் மூலம் வானில் தெரியும் கோள்கள் எதுவென்று கண்டறியலாம், அவற்றைத் துல்லியமாகப் படம் பிடிக்கலாம். வானியல் அழகை ரசிக்க விருப்பமுள்ளவர்கள் ஆரம்ப கட்டமாக இதிலிருந்துதான் தொடங்க வேண்டும். தொழில்முறை அளவில் இத்துறையில் ஈடுபட விரும்பினால் அதற்கேற்ப கேமராக்கள், உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்தலாம்” என்கிறார் ஆகாஷ்.
பொறுமையும் திட்டமிடலும்: “இயற்கை அற்புதங்களைப் படம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்குப் பொறுமை தேவை. அதோடு வானியல் காட்சிகளை ரசிக்கவும் திட்டமிட வேண்டும்” எனச் சொல்லும் ஆகாஷ், வானியல் ஒளிப்படங்களை எடுப்பதைப் பற்றி மணிக்கணக்கில் பேசுகிறார்.
“வானியல் ஒளிப்படங்கள் எடுக்க இன்றைய தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்படுகின்றன. கூகுள் ஸ்கை மேப் போன்ற ஆண்ட்ராய்டு செயலி, ஸ்டார் வாக் 2, ஸ்டெல்லேரியம் போன்ற ஆண்ட்ராய்டு, ஐபோன் செயலிகளைப் பயன்படுத்தி வானியல் ஒளிப்படங்களை எடுக்கலாம். அதற்குச் சரியான இடம், நேரத்தை முன்கூட்டியே கணித்துத் திட்டமிடலாம்.
வானியல் நிகழ்வுகள் சில மணித்துளிகள் முதல் சில மணி நேரம் வரை நீடிக்கக்கூடியவை. எனவே, இந்தத் திட்டமிடல் அவசியமாகிறது. தவிர சாதாரணமாகக் காற்று, ஒளி மாசுபாடற்ற மலைப்பகுதிகளுக்குச் சென்றும் வானியல் ஒளிப்படங்களை எடுக்கலாம். நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் அந்தக் காட்சிகளை ஓவியம் போல நம் கேமராவுக்குக் கடத்தலாம்” என்று விவரிக்கிறார் ஆகாஷ்.
வாய்ப்புகள் அதிகம்: வானியல் ஒளிப்படங்களை எடுப்பதோடு மட்டுமல்லாமல், அதுதொடர்பான தகவல்களைக் குழந்தைகள், இளைஞர்களிடமும் பகிர்ந்துகொள்கிறார் ஆகாஷ். இந்தத் தலைமுறையினர் வானியல் ஒளிப்படங்களில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சொல்கிறார்.
“திறன்பேசியில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அதைப் பயன்படுத்தியே இப்படியும் இயற்கையை ரசிக்கலாம். இது நிச்சயம் அவர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும். பரபரப்பான நகர வாழ்க்கையில் சிக்கியிருக்கும் பலருக்கு வானத்தைப் பார்த்து ரசிக்கக்கூட நேரமிருப்பதில்லை.
ஒரு முறை நட்சத்திரங்களைப் பார்த்து ரசிக்கத் தொடங்கிவிட்டால் அவற்றின் மீது ஆர்வம் குவிந்துவிடும். வானியல் அறிமுகம் பெற்ற குழந்தைகள் அடுத்தடுத்து இதுதொடர்பாகப் பல கேள்விகளை அடுக்கிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வானியலை அறிந்துகொள்வது கடினம் என்கிற கருத்து பொதுவாக இருக்கிறது. அது உண்மையல்ல. யூடியூபிலேயே இது குறித்துப் போதுமான தகவல்கள் இருக்கின்றன. சில தளங்களில் எளிய அறிவியல் மொழியில் அனைவருக்கும் புரியும்படியான விளக்கங்கள் இருக்கின்றன.
வானியல் நிகழ்வுகள், வானியல் ஒளிப்படம் எடுப்பது தொடர்பான கலந்துரையாடல்களை ஊக்கப்படுத்தும் குழுக்கள் சமூக வலைத்தளத்தங்களில் இயங்கிவருகின்றன. இத்துறையில் இயங்க விரும்புவோர் இதுபோன்ற குழுக்களில் இணைந்து பயன் பெறலாம்.
ஒளிப்படக் கலைஞர்கள் இணைந்து ‘Star gazing’ எனப்படும் ‘நட்சத்திர நோக்கு’ சுற்றுலாக்களையும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடத்திவருகின்றனர். இதில் வித்தியாசமான அனுபவம் கண்டிப் பாகக் கிடைக்கும். ஏராளமான வாய்ப்புகளும் இருக்கின்றன” என்று வழிகாட்டுகிறார் ஆகாஷ்.