

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்ற ‘காதோடு சொல்..’ என்கிற பாடல் பிரபலம். கேட்டவுடன் பிடித்துப்போகிற இந்தப் பாடலை எழுதியவர் கிருத்திகா நெல்சன். சென்னையைச் சேர்ந்த இவர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகி, உதவி இயக்குநர் எனப் பல முகங்களைக் கொண்டவர். அது மட்டுமல்ல, இதே திரைப்படத்தில் கவனம் ஈர்த்த ‘குந்தவை’ கதாபாத்திரத்துக்குப் பின்னணிக் குரல் பேசியவரும் இவர்தான்.
ஒரு பெண், பல வேலைகள்: ஒரு படத்தில் பல தளங்களில் பணியாற்றிய கிருத்திகா சிறு வயது முதலே வாசிப்புப் பழக்கம் கொண்டவர். ஆங்கிலம், தமிழ் மொழிகளில் புலமை வாய்ந்தவர். மீடியா தொடர்பாக இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ரேடியோ ஜாக்கியாகத் தனது பணியைத் தொடங்கியவர். ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குள் எப்படி வந்தார் கிருத்திகா?
“முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம் எனத் திட்டமிட்டிருந்த நேரத்தில்தான் தனியார் எஃப்.எம்.மில் எனக்கு வேலை கிடைத்தது. ஆர்.ஜே.வாகப் பணியாற்றச் சென்ற இடத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ஆர்.ஜே. பயணத்தை அடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரலை நிகழ்ச்சிகள் எனப் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
அதற்கு நடுவில் பாடல்கள் எழுதுவது, பாடுவது என எனக்கு மிகவும் பிடித்த இசைத் துறையிலும், டப்பிங் துறையிலும் இயங்கி வந்தேன். அப்போதுதான் இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ’பொன்னியின் செல்வன்’ படத்துக்காகப் பணியாற்றிய அனுபவம், பல புதிய வாய்ப்புகளுக்கும் வழிவகுத்தது” என உற்சாகமாகப் பேசுகிறார் கிருத்திகா.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘காதோடு சொல்..’ பாடல் எழுதும் வாய்ப்பு, இவரைத் தேடி வரவில்லை. அந்த வாய்ப்பு இவரே உருவாக்கிக் கொண்டதுதான். ‘“பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பாடல் எழுத வேண்டியிருந்தது.
நான் எழுத முயற்சி செய்யட்டுமா என இயக்குநரின் அனுமதியோடு எழுதியதுதான் ’ காதோடு சொல்’ பாடல். இது படக்குழுவினருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் பிடித்துப் போனது.
சில காரணங்களால் அப்பாடல் திரைப்படக் காட்சியாக இடம்பெறவில்லை. என்றாலும் பாடல் வரிகள் அடங்கிய காணொளி யூடியூபில் 90 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது. இப்பாடலை அடுத்து ’நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து திரைப்படங்களிலும், சுயாதீன இசைக் காணொளிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறேன்” என்கிறார் கிருத்திகா. இவர் எழுதி இசையமைத்து இயக்கிய ’நீ மட்டும்..’ என்கிற பாடல், யுடியூபில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது. இன்ஸ்டகிராம் ரீல்ஸ்களில் அதிகம் பகிர்ந்துகொள்ளப்பட்ட வைரல் பாடல்களில் ஒன்றாகவும் இப்பாடல் ஆனது.
டப்பிங் பயணம்: இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தில் நடிகை துளசிக்கும், ‘காற்று வெளியிடை’, ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடிகை அதிதி ராவுக்கும் கிருத்திகா பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே படங்களில் டப்பிங் பேசியிருந்தாலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவைக்காக (நடிகை த்ரிஷா) அவர் பேசிய டப்பிங் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து, த்ரிஷா அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் சில படங்களில் டப்பிங் பேச உள்ளதாக, மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் கிருத்திகா.
திரைத்துறை என்பது மிகவும் சவாலானது. அதில் ஒரு பெண்ணாகப் பல துறைகளைக் கையாண்டுக் கொண்டிருக்கும் கிருத்திகா, திரைத் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு வழிகாட்டியைப் போல மாறியிருக்கிறார். திரைத் துறையில் ஏற்றுக்கொண்ட சவாலான பணிகளை எப்படிக் கையாள்கிறார் கிருத்திகா?
“திறைத்துறையைப் பொறுத்தவரை உதவி இயக்குநராகப் பணியாற்றுவது மிகவும் சவாலானது. ஆனால், எந்தத் துறையானாலும் ஆண், பெண் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. எந்த வேலையையும் சவாலானதாக நினைக்காமல் முழு அர்ப்பணிப்புடன் விரும்பிச் செய்தால் அந்த வேலை சுலபமாகும். ஒரு வேலையை ஒப்புக்கொண்டால், அதை முழுமையாகச் செய்து முடிக்க முதலில் திட்டமிடுவேன்.
ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமே தவிர பிறருடன் ஒப்பிட்டுப் போட்டியில் இருக்க வேண்டியதில்லை. பல பிரச்சினைகள் வந்தாலும் அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் நிச்சயம் நாம் இலக்கை எட்டுவோம். திரைத்துறை என்பது அனைவருக்குமானதுதான். அதில் பெண்களும் நிச்சயம் சாதிக்கலாம்” என உற்சாகமூட்டுகிறார் கிருத்திகா.