தலைநகரின் மியூசியம் கஃபே!

சுப
சுப
Updated on
2 min read

வழக்கமாக அருங்காட்சியகம் என்றால் அமைதியாகவும் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்ட அரிய பொருட்களைப் பார்வையிடும் இடமாகவும் இருக்கும். ஆனால், சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள ‘அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகம்’ இதற்கு விதிவிலக்கு.

அனைவரும் அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் நுழைவாயில், பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் தொட்டு உணரக்கூடிய வழிகாட்டி வரைபடம், கடற்கரையைப் பார்த்தபடி அமைந்திருக்கும் கஃபே எனச் சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

அனைவருக்குமான இடம்: காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கிறது இந்த ‘அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகம்’. தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப வசதியுடன் இயங்கக்கூடிய உதவிப்பொருள்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றைப் பயன்படுத்த, பொருள்களை வாங்க தேவையான வழிகாட்டுதல்கள், செயல் முறை விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் பணியாற்றிவருகிறார்கள்.

மாணவர்களின் பங்களிப்பு: சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள், பிசியோதெரபி மாணவர்கள், கட்டிடக்கலை மாணவர்கள் என இளைஞர்களே இந்த அருங்காட்சியகத்துக்கு அதிகம் வருகிறார்கள். அவ்வப்போது இங்கு நடத்தப்படும் பயிலரங்குகளில் இவர்கள் பங்கேற்று, அருங்காட்சியகத்தை மாற்றி அமைப்பது குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். “அருங்காட்சியகத்தின் உள் வடிவமைப்பை காலத்துக்கேற்ப மேம்படுத்திக்கொண்டே இருக்கிறோம்” என்கிறார் அருங்காட்சியகத்தின் மேலாளர் அ. பிரபாகரன்.

“மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தரும் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தத் தயாராக இருக்கிறோம். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அதன் காரணமாக இங்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் குறைவு” என்கிறார் பிரபாகரன்.

மாற்றுத்திறனாளிகளின் கஃபே: அருங்காட்சியகத்தின் தரைத்தளத்தில் பயனுள்ள அம்சங்கள் இருக்கின்றன என்றால், முதல் தளத்தில் அழகான கஃபே அமைக்கப்பட்டுள்ளது. இந்த கஃபேயில் குறைந்த அளவு ஆட்டிசம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு பேக்கரியை நடத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிப்பது, பரிமாறுவது, வாடிக்கையாளருடன் இயல்பாகப் பேசுவது போன்றவற்றுக்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். அதோடு அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் வழங்குகிறார்கள். கடலை ரசித்துக்கொண்டே சாப்பிடலாம். மற்ற இடங்களைவிட விலையும் குறைவு.

இளம் பட்டாளம்: இந்த கஃபேயில் பணியாற்றும் 20 வயது சுபயிடம் பேசினோம். “மாற்றுத்திறனாளி களுக்கான பள்ளியில் படித்துவிட்டுத்தான் இங்கு வந்தேன். எனக்கு பேக்கரி தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆசை. திருநெல்வேலியிலிருந்து இங்கு வந்து பயிற்சி எடுத்தேன். இங்கு வந்த பிறகு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

தற்போது பயிற்சிப் பணியில் இருக்கிறேன். 6 மாதங்கள் கழித்து என்னுடைய ஊருக்குச் சென்று சொந்தமாக பேக்கரி வைப்பேன்” என்று நம்பிக்கையும் உற்சாகமும் கொப்பளிக்கப் பேசுகிறார். இவருடன் பணியாற்றும் அனைவருமே 25 வயதுக்குட்பட்ட இளம் பட்டாளம். தலைநகர மக்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த ‘மியூசியம் கஃபே’.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in