

அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்தியன் ஞானசேகரன். சர்வதேச டேபிள் டென்னிஸ் அரங்கில் முன்னேறிக்கொண்டிருக்கும் 29 வயதான அவர், உலகத் தரவரிசைப் பட்டியலில் டாப் 25 இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீரரும்கூட.
நம்பிக்கை தரும் கம்-பேக்: 12 வயதில் ஜூனியர் பிரிவில் பதக்கங்களை வெல்ல ஆரம்பித்த சத்தியன், சர்வதேச அளவில் சீனியர் பிரிவில் பங்கேற்ற ஒவ்வொரு தொடரிலும் இந்தியாவுக்குப் பதக்கங்களைக் குவித்தவர். காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுத் தொடர்களின் ஒற்றையர் - இரட்டையர் பிரிவுகள், ஆசிய விளையாட்டின் ஆடவர் அணியில் பதக்கங்களை அள்ளிய இவர், 2020ஆம் ஆண்டில் முதல் முறையாக டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் கண்டார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொடரின் இரண்டாவது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பின் வெளியேறினார். அதன்பின் சில காலம் இடைவெளி எடுத்துக்கொண்ட அவர், தற்போது தேசிய சாம்பியனாக அசத்தலான கம்-பேக் கொடுத்திருக்கிறார்.
“ஒலிம்பிக் போன்ற பெரிய தொடர்களில் முதல் முறையாக விளையாடும்போது ஒருவிதப் பதற்றம் ஏற்படுவது இயல்புதான். எனக்கும் அது ஏற்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த அனுபவத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு, விளையாட்டின் நுணுக்கங்களை மேம்படுத்தியிருக்கிறேன்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட வேண்டுமெனப் பயிற்சி எடுத்துவருகிறேன். இதற்காக பிரான்ஸ், ஜெர்மனி, சென்னை, ஹைதராபாத் எனச் சென்றுகொண்டிருக்கிறேன். கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்ல இந்திய வீராங்கனை மணிகா பத்ராவுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகிறேன். தற்போதுள்ள ஃபார்ம் தொடர்ந்தால் பாரீஸில் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் அணி நிச்சயம் அசத்தும்” என நம்பிக்கை தெரிவிக்கிறார் சத்தியன்.
டாப் 10 இல் எப்போது? - டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசைப் பட்டியலில் 24ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் சத்தியன். மற்ற இந்திய வீரர்கள் எவரும் செய்யாத சாதனை இது. அதே வேளையில் நீண்ட காலமாக டாப் 10இல் நுழையவும் போராடிக் கொண்டிருக்கிறார்.
“டாப் 10இல் நுழைய வேண்டும் என்கிற திட்டம் இருக்கிறது. அதற்கு இந்த ஆண்டு அடுத்தடுத்து நடைபெற உள்ள தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டும். தற்போது இந்த சீசன் முடிவில் டாப் 20இல் நுழைய வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. இதை எட்ட பெரிதாகப் பாதிக்கக்கூடிய வகையில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதோடு இப்போதிருக்கும் நல்ல ஃபார்மை ஒலிம்பிக் முடியும் வரை தொடர வேண்டும். அதில்தான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய பவர் கேம், ஃபிட்னஸ் ஆகியவற்றை மேம்படுத்தும்பட்சத்தில் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்கிறார் சத்தியன்.
இளைய தலைமுறையினர் கையில்: இந்திய டேபிள் டென்னிஸின் அடையாளமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனியர் வீரரான சரத் கமல். 40 வயதான அவர், ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரர். சர்வதேசத் தொடர்களிலும் பதக்கங்களை வென்று குவித்தவர்.
சரத் கமலை அடுத்து சத்தியன், மணிகா, மௌமா தாஸ், மானவ் தாக்கர் என இளம் தலைமுறையினர் கையில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் பத்திரமாக இருக்கிறது. எனினும் கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன் விளையாட்டுகளைப் போல டேபிள் டென்னிஸ் மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை என்ற எண்ணம் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
“மற்ற விளையாட்டுகளைப் போல டேபிள் டென்னிஸை எளிதாகப் பின்பற்ற முடியாது. வேகமாக நகரும் பந்தைத் திரையில் கவனிப்பது கடினம். இதனால் மக்கள் மத்தியில் இந்த விளையாட்டு இன்னும் பிரபலமடையாமல் இருக்கலாம். ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்லும்போது கண்டிப்பாக மக்களின் கவனம் டேபிள் டென்னிஸ் பக்கம் திரும்பும். அதுபோன்ற ஒரு வரலாற்று தருணத்துக்காகக் காத்திருக்கிறோம்.
அண்மைக் காலமாக சர்வதேசத் தொடர்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்ல வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவே மாற்றத்துக்கான முதல் படிதான். ஜுனியர் அளவில் திறமையானவர்கள் ஏராளமாக உள்ளனர். ஆர்வமாக டேபிள் டென்னிஸ் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியாவில் டேபிள் டென்னிஸின் எதிர்காலம் சிறப்பாகவே உள்ளது” என்று உறுதியாகக் கூறுகிறார் சத்தியன்.