

‘முத்து நகர்’ என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய அடையாளமாக மாறியிருக்கிறார் இளம் தடகள வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின். நீளம் தாண்டுதலில் 8.42 மீட்டர் தாண்டி தேசிய சாதனை படைத்திருக்கிறார் இவர். 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்காகத் தயாராகிவரும் ஜெஸ்வின், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உருவெடுத்துவருகிறார்.
மாற்றம் முன்னேற்றம்: தூத்துக்குடி முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெஸ்வின். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்கிற பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு வளர்ந்த இவருக்கு விளையாட்டிலும் ஆர்வம் துளிர்த்தது. பள்ளி உடற்கல்வி ஆசிரியரின் வழிகாட்டுதலில் முதலில் உயரம் தாண்டுதலில் பயிற்சி எடுக்கத் தொடங்கி, பின்னர் நீளம் தாண்டுதலுக்கு மாறினார்.
“பள்ளி மைதானத்தில் நான் நீளம் தாண்டுவதைப் பார்த்து என்னுடைய உடற்கல்வி ஆசிரியர் ஜெனிஸ்கர் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். இதில் கவனம் செலுத்துமாறு அவர் தொடர்ந்து கூறியதால், அந்தப் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினேன். 2018ஆம் ஆண்டு ராஞ்சியில் தேசிய அளவிலான ஜூனியர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்றபோது பிரான்ஸ் பயிற்சியாளர் ஆண்டனி என்னுடைய திறனைக் கண்டு ஐஐஎஸ் (Inspire Institute of Sports) தளத்தில் பயிற்சி எடுக்க உதவினார்.
அவரைத் தொடர்ந்து இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கியூபாவின் பெடன்சோஸிடனிடம் பயிற்சி எடுத்துவருகிறேன். சாதாரணமாகப் பள்ளி மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கிய நான், இன்று உலகத் தர வசதி கொண்ட பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் அளவுக்கு மாறியிருக்கிறேன். உலகத் தரத்தில் பயிற்சி பெறுவது என்னுடைய விளையாட்டுத் திறனைப் பல மடங்கு மேம்படுத்தியிருக்கிறது” என்கிறார் ஜெஸ்வின்.
முத்திரை ஆட்டங்கள்: உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாகப் பங்கேற்றது, நான்கு முறை 8.20 மீட்டர் தூரம் தாண்டியது என 2022ஆம் ஆண்டில் கவனிக்கவைத்த தடகள வீரராக ஜெஸ்வின் மாறியிருக்கிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கத் தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம், மார்ச் மாதம் பெல்லாரியில் நடைபெற்ற இரண்டாவது இந்திய ஓபன் ஜம்ப்ஸ் தொடர் நீளம் தாண்டுதலில் எம்.ஸ்ரீசங்கரிடம் இருந்த தேசிய சாதனையைத் தன்வசப்படுத்தியது எனச் சிறப்பாக விளையாடி எதிர்ப்பார்ப்பைக் கூட்டியிருக்கிறார்.
தடகளத்தைப் பொறுத்தவரை தேவையற்ற காயங்களைத் தவிர்த்து முறையாகப் பயிற்சி எடுப்பதால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார் ஜெஸ்வின். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் நீளம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை படைத்தேன். அந்தப் போட்டி முடிந்த பிறகு எனக்குத் தொடையில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீள மிகவும் சிரமப்பட்டேன்.
அதன் பிறகு முடிந்தவரை காயங்களைத் தவிர்க்க பயிற்சி எடுத்துக்கொண்டேன். உடல் சோர்வாக இருக்கும்போது தீவிரமாகப் பயிற்சி செய்வதைத் தவிர்த்து விடுவேன். சோர்வு இருந்தால் ஓய்வு அவசியம். மீண்டும் உடல் ஒத்துழைக்கத் தொடங்கும்போது முழு வீச்சில் பயிற்சி எடுத்துக்கொண்டால் காயங்களைத் தவிர்க்கலாம். திட்டமிட்டுப் பயிற்சி செய்தால் சிறப்பாக நீளம் தாண்ட முடியும்” என்கிறார் ஜெஸ்வின்.
ஒலிம்பிக் கனவு: எந்தத் தடகள வீரராக இருந்தாலும் ஒலிம்பிக் கனவு இல்லாமல் இருக்குமா? ஜெஸ்வினுக்கும் இருக்கிறது. ’மின்னல் வீரர்’ உசேன் போல்ட்டைத் தனது வழிகாட்டியாகக் கருதும் ஜெஸ்வின், ஒலிம்பிக் கனவைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கிறார்.
2024 பாரீஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடருக்கு முன் இந்த ஆண்டு வரிசையாகச் சர்வதேசத் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டிக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 8.27 மீட்டர் தாண்ட வேண்டும். இந்த சீசனில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் ஜெஸ்வினின் ஒலிம்பிக் கனவும் நனவாக வாய்ப்பு உண்டு.
“ஜூலை மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசியத் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளேன். 8.20 மீட்டர் நீளத்தைச் சிரமமின்றி தாண்டவும் பயிற்சி எடுத்து வருகிறேன்.
நிச்சயமாக என்னுடைய அடுத்த இலக்கு ஒலிம்பிக்தான். இந்த சீசனில் சிறப்பாக விளையாடி, ஒலிம்பிக் தொடருக்குத் தகுதிபெற வேண்டும். அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் பதக்கமும் வெல்ல வேண்டும்” என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஜெஸ்வின்.