

சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே யூடியூபர்களின் காணொளிகள் கொட்டிக்கிடக்கின்றன. சமையல், பயணம், சினிமா, தொழில்நுட்பம் எனத் தமிழ் யூடியூபர்கள் மத்தியில் விவசாயத்தை பற்றிப் பேசி அசத்திவருகிறார் சிவகாசி மாவட்டம் பூவாகபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார். 500-க்கும்அதிகமான காணொளிகள், 10 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்வோருடன் இவருடைய ’நவீன உழவன்’ அலைவரிசை இணையத்தில் பிரபலம்.
சந்தைப்படுத்துதல்: பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிவரும் தினேஷ்குமார் 2018இல் ‘நவீன உழவன்’ எனும் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கினார். இவருடைய தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவுடன் பெற்றோர் இருவரும் சேர்ந்து விவசாயம் செய்யத் தொடங்கினர். இதைப் பார்த்துத்தான் விவசாயத்தின் மீது தினேஷுக்கு ஆர்வம் பிறந்தது.
“எனக்கும் விவசாயம் செய்ய ஆர்வமிருந்தாலும் முறையாக எப்படிச் செய்வது, விளைவித்த பொருள்களை எப்படி விற்பனை செய்வது என நிறைய சந்தேகங்கள் இருந்தன. எளிமையாக விவசாயம் செய்வதற்கு மாற்று வழிகள், புதிய தொழில்நுட்பம், நேரடிச் சந்தை விற்பனை போன்றவற்றைப் பற்றி நான் அறிந்துகொண்டதை முதலில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன். பிறகுதான் அந்தத் தகவல்களைக் காணொளிகளாகப் பதிவிடலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
அப்படித்தான் ‘நவீன உழவன்’ அலைவரிசையைத் தொடங்கினேன். தொடக்கத்தில் 30 காணொளிகளைப் பதிவிட்டும் வெறும் 100 பேர்தான் பின்தொடர்ந்தனர். ஆனால், தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்” என்கிறார் தினேஷ்.
நேரடிப் பயணம்: பல ஊர்களுக்குப் பயணம் செய்து மாடித்தோட்டம், பண்ணைகள், இயற்கை உணவுப் பொருள்கள், ஒருங்கிணைந்த பண்ணைகள், சந்தைப்படுத்துதல் பற்றிப் பேசிவரும் தினேஷ், துபாய், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று வெளிநாட்டு விவசாய முறைகள், இயந்திரங்கள் குறித்த தகவல்களையும் காணொளி களாக்கிப் பகிர்ந்திருக்கிறார். வெற்றிகரமான விவசாயியாக இருக்க சந்தைப்படுத்துதல் முக்கியம் என்றும் அவர் சொல்கிறார்.
“வித்தியாசமான விவசாயிகளையும் அவர்களுடைய சந்தைப்படுத்தும் முறையையும் நேரடியாகக் கேட்டே காணொளிகளில் வெளியிடுகிறேன். இது மற்ற விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமைகிறது. வேளாண் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் பலரும் காணொளிகளைப் பார்த்து நேரடியாக விவசாயிகளைத் தொடர்புகொண்டு பொருள்களை வாங்குகிறார்கள். இரு தரப்புக்கும் பயனுள்ள வகையில் காணொளிகளைப் பதிவிடுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார் தினேஷ்.
தனி ஒருவன்: விவசாயிகளைத் தொடர்புகொள்வதிலிருந்து படம்பிடிப்பது, தொகுப்பது என ஒரு காணொளியைத் தயார் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் தனி ஆளாகச் செய்துவருகிறார் தினேஷ். “செல்போன் கேமராவில் காணொளிகளை எடுக்கத் தொடங்கி, இன்று தொழில்முறை கேமராவுக்கு முன்னேறியிருக்கிறேன். கேமரா இயக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றை நானே செய்கிறேன்.
உதவிக்கு ஆள் நியமித்தால், ஒரு நிறுவனமாக மாறி கட்டாயத்தின்கீழ் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நேரம் கிடைக்கும்போது மட்டும் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக ஐந்து ஆண்டுகளாகத் தனி ஆளாகப் பணிகளைச் செய்கிறேன்” என்கிறார் தினேஷ்.
இந்த அலைவரிசையை வணிக சமரசம் செய்யாமல் அவர் இயக்கிவருவது தனிச்சிறப்பு. கிராமங்களில் கிடைக்கும் ஆட்டுப்புழுக்கை, வேப்பங்குச்சிகளை அமேசானில் விற்பனை செய்யும் 21 வயது இளைஞர், 10 ரூபாய்க்குப் பால் விற்பனை செய்யும் இளம் பண்ணையாளர் என தினேஷ் பதிவுசெய்திருக்கும் பல வெற்றிக்கதைகளில் சில இளைஞர்கள் குறித்த கதைகளும் உண்டு.
“வேளாண் துறையில் களமிறங்க இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம். என்றாலும் இதில் வெற்றிபெறுவோர் எண்ணிக்கை மிகக் குறைவே. குறைந்த லாபம் ஈட்டத் தொடங்கியவுடனே உள்கட்டமைப்பு வசதிகளுக்காக அதிக செலவு செய்து நஷ்டத்தில் சிக்குகிறார்கள். முறையான திட்டமிடலுடன் செயல்பட்டால் விவசாயத்திலும் நிச்சயமாக லாபம் ஈட்டலாம். இந்த யூடியூப் பயணத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து விரைவில் முழு நேர விவசாயியாகக் களமிறங்க வேண்டும் என்பதே என்னுடைய திட்டம்” என உறுதிப்படக் கூறுகிறார் தினேஷ்.
காணொளியைக் காண: https://bit.ly/3JqYO4y