வரலாறு முக்கியம் பாஸ்

வரலாறு முக்கியம் பாஸ்
Updated on
3 min read

வரலாற்றில் மறக்க முடியாத அரசியல் தலைவர்கள், திரை ஆளுமைகளின் கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசினால் எப்படி இருக்கும்? பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி, எம்.ஜி.ஆர், மைக்கேல் ஜாக்சன் ஆகியோரது அரிய ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசுவதைத் தனது முழுநேர வேலையாகச் செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த 27 வயதான சுயாதீனக் கலைஞர் ஜெய்ந்த்.

ஜெய்ந்த்
ஜெய்ந்த்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற ஜெய்ந்த், கரோனா ஊரடங்குக் காலத்தில் யூடியூப் பார்த்துச் சில திறன்களை வளர்த்துக்கொண்டார். சேதமடைந்த பழைய ஒளிப்படங்களை மீட்டெடுப்பதிலும், கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசுவதிலும் (Restoration and Colourisation) கவனம் செலுத்தத் தொடங்கியவர் ‘நிறமி’ என்கிற இன்ஸ்டகிராம் பக்கத்தை நிறுவி தனது படைப்புகளை அதில் பதிவேற்றிவருகிறார். இவை சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று நெட்டிசன்களால் அதிகம் பகிரப்படுகின்றன.

‘நிறமி’ குறித்துப் பேசிய ஜெய்ந்த், “கலை, அரசியல் என எதுவாக இருந்தாலும் அந்தக் காலத்துத் திரைப்படம், அந்தக் காலத்து அரசியல் என இன்றைய தலைமுறையினர் ஒதுங்கிப்போவது இயல்பு. இதுதான் இரண்டு தலைமுறை களுக்குமான இடைவெளி. ஆரம்பத்தில் நானும் முந்தைய காலத்துக் கதைகளையும் அரசியலையும் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வமற்றவனாகவே இருந்தேன்.

ஒரு கட்டத்தில் தயக்கத்தைக் களைந்து நிறைய செய்திகளைத் தேடிப் படித்தேன். நான் தெரிந்துகொண்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்த ஒளிப்படங்களை ஒரு கருவியாகத் தேர்வு செய்தேன். ஒவ்வொரு ஒளிப்படத்துக்குப் பின்னால் இருக்கும் கதை, சித்தாந்தத்தைத் தெரிந்துகொள்ளத் தூண்டும் சுவாரசியத்தைக் கூட்ட பழைய அரிய ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசி இந்தக் காலத்தோடு தொடர்பை ஏற்படுத்தினேன்.

உதாரணத்துக்கு பெரியார் என்றால் எப்போதும் கருத்தியல் பேசும் பெரியவர் என்கிற பிம்பமே நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. அவர் குழந்தைகளுடன் சிரித்துப் பேசும் ஒளிப்படங்களைப் பார்க்கும்போது அந்தப் பிம்பம் விரிவடையும். இதுபோன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஒளிப்படங்களை வண்ணமயமாக்கி அதன் பின்னால் இருக்கும் கதைகளைச் சுருக்கமாகச் சுட்டியில் பதிவிடுகிறேன்” என்றார்.

ஆவணப்படுத்துதல்: இந்த வேலைப்பாடுகளைச் சீராகச் செய்ய ‘ஃபோட்டோஷாப்’ மென்பொருளை ஜெய்ந்த் பயன்படுத்துகிறார். ஒரு ஒளிப்படத்துக்கான வேலையை முழுதாகச் செய்து முடிக்க சில மணி நேரம் முதல் சில நாட்கள் வரை ஆகலாம் என்கிறார். “பழைய ஒளிப்படங்களை டிஜிட்டல் ஆவணக்காப்பகத்தில், பத்திரிகைகளில் இருந்து எடுத்து மீட்டுருவாக்கம் செய்கிறேன். சில படங்கள் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதமடைந்திருக்கும்.

அந்தப் படங்களைப் பற்றிய குறிப்புகளை, செய்திகளைத் தேடி தகவல் சேகரித்து ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசி முடிக்க அதிக நேரமெடுக்கும். இதில் ஆவணப்படுத்துதல்தான் முதன்மையான நோக்கம் என்பதால் முடிந்தவரை வரலாற்றுப் பிழையின்றி இருக்க வேண்டுமென்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறேன். ஒளிப்படத்தின் உண்மைத்தன்மையைப் பாதிக்காத வகையில் வண்ணம் பூசுவது மிகப் பெரிய சவால்” என்றார்.

பாராட்டுகளும் விமர்சனங்களும்: “கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசுவது அசலின் நகல்தானே தவிர ஆதாரப் படத்துக்கான மாற்று கிடையாது.பழைய படங்களை வண்ணமயமாக பார்க்கும்போது சிலருக்குப் பிடித்திருந்தாலும் இன்னும் சிலர் இது போலியாக இருப்பதாக விமர்சித்துள்ளனர். வண்ணப் படங்களைப் பொறுத்தவரை படத்தில் முதன்மையான நபரையும் பொருளையும் தவிர சுற்றியிருக்கும் மற்ற விஷயங்களையும் எடுத்துச் சொல்லும். பார்ப்பவர்களுக்கு அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.

ஆனால் அதே வண்ணப் படங்கள்தாம் நிறைய கதைகளையும் சொல்லும். இதனால், பழைய படங்களுக்கு வண்ணம் பூசுவது வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு சிறிய முயற்சிதான். இதைத் தவிர முந்தைய தலைமுறைக் குடும்பங்கள் எடுத்துக்கொண்ட குழுப் படங்களைச் சீராக்கி வண்ணமயமாக்கிவருகிறேன். இதில் வரும் வருமானத்தை வைத்துத் தொடர்ந்து இத்துறையில் இயங்கி வருகிறேன்” எனச் சொல்லி முடிக்கிறார் ஜெய்ந்த்.

இன்ஸ்டகிராமில் காண: https://bit.ly/3Les4xX

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in