இளைஞர்களின் தொண்டுப் பயணம் தெரியுமா?

இளைஞர்களின் தொண்டுப் பயணம் தெரியுமா?
Updated on
2 min read

சுற்றுலா என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம்தான். தனிப்பயணமோ குழுப்பயணமோ எப்போதும் பயணங்கள் தரும் அனுபவங்கள் அலாதியானவை. எதிலும் புதுமையைப் புகுத்தும் இன்றைய தலைமுறையினர் பயணத்திலும் ஒரு புதிய முறையைப் புகுத்திவருகிறார்கள். அது, ‘Voluntourism’ எனப்படும் ‘தொண்டுப் பயணம்!’

அதென்ன தொண்டுப் பயணம்? - பட்ஜெட் போடாமல் யாரும் பயணத்தை மேற்கொள்ள முடியாது. பட்ஜெட்டுக்கு ஏற்ற பயணத்தை அமைத்துக்கொள்வதுதான் இந்தியர் களின் பழக்கம். அந்த வகையில் பட்ஜெட் பயணங்களைப் போலவே சில இளைஞர்கள் தொண்டுப் பயணத்தை அமைத்துக்கொள்கிறார்கள்.

இதைத்தான் ‘Voluntourism’ என்கிறார்கள். இதற்காகவே இந்தியா முழுவதும் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களில் அமைந்திருக்கும் சில குழுக்கள் தொண்டுப் பயணம் மேற்கொள்ளும் தன்னார்வலர்களை விரும்பி வரவேற்கிறார்கள்.

சுற்றுலாவுக்கு வழக்கமான விருந்தினராக இல்லாமல் தன்னார் வலராகச் செல்பவருக்குத் தங்கும் இடம், உணவு இலவசம். கட்டணத்துக்குப் பதிலாகத் தங்கும் இடத்துக்குத் தொண்டு செய்ய வேண்டும். அதாவது, தங்கும் இடத்துக்குப் பணம் கொடுப்பதற்குப் பதிலாக இடத்தைச் சுத்தம் செய்வது, சமையல் செய்வது, சுவரில் வரைவது, ஒளிப்படங்கள் எடுப்பது, சமூக வலைதளப் பக்கத்தை நிர்வகிப்பது எனத் தங்கும் இடத்தில் ஏதாவதொரு தொண்டு செய்ய வேண்டும்.

பட்ஜெட் பயணம்: சென்னையைச் சேர்ந்த 27 வயதான செந்தூரன், திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருபவர். அண்மையில் தொண்டு தன்னார் வலராக ஒரு வாரம் மணாலி சென்றிருந்தார். அங்கே தங்குமிடம், உணவுக்காக அவருக்கு ஆன மொத்தச் செலவே வெறும் 1,400 ரூபாய்தான். இதுவே சாதாரணமாகச் சென்றிருந்தால் குறைந்தபட்சம் ரூ. 5000த்துக்கு மேல் செலவாகியிருக்கலாம். இந்தப் பயணம் குறித்து செந்தூரனிடம் பேசினோம்.

“பயணம் செய்ய எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால், நேரமின்மையால் பயணங்கள் நின்றுபோவது ஒரு பக்கம் இருந்தாலும் அதிகச் செலவாகிவிடும் என்பதால்தான் பலரும் பயணம் செய்வதைத் தவிர்க்கிறார்கள். இந்தச் சிக்கலை ‘Voluntourism’ போக்குகிறது எனச் சொல்லலாம். இந்தியாவில் இச்சேவையை வழங்கும் இணையதளங்கள், செயலிகள் நிறையவே உள்ளன. ஆனால், பெரும்பாலானோருக்கு இச்சேவையைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் இல்லை.” என்கிறார் செந்தூரன்.

ஒரு வேளை நீங்கள் இதுபோல பயணம் செய்ய விரும்பினால், இச்சேவையைப் பயன்படுத்த நமது விருப்ப இடத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அங்கே தன்னார்வலர்களை வரவேற்கும் குழுக்களைப் பற்றி இணையதளத்தில் தேட வேண்டும். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழுக்களைத் தேர்வுசெய்து, நாம் பயணப்பட இருக்கும் நாள்களைக் குறிப்பிட்டுத் தன்னார்வலராகத் தங்க அனுமதி கோரலாம் என்கிறார் செந்தூரன்.

“நாம் செய்யவிருக்கும் வேலை அக்குழுவுக்கும், தங்கும் இடத்தில் விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள், கட்டணம், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை நமக்கும் பொருத்தமாக இருப்பின் தன்னார்வலராகத் தாராளமாகப் பயணப்படலாம்” என்கிறார் அவர்.

கவனிக்க வேண்டியவை: என்றாலும், தன்னார்வலராகப் பயணம் செய்யும் முன் முக்கியமானசில விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் அவசியம். இச்சேவையை வழங்கும் குழுக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். தொண்டு செய்வதற்குப் பதிலாகத் தங்கும் இடம், உணவு ஆகியவற்றை இலவசமாக வழங்கும் குழுக்கள், இலவசமாக அல்லாமல் கட்டணத்தின் ஒரு பகுதிக்குத் தள்ளுபடி வழங்கும் குழுக்கள், மூன்றாவதாகத் தங்கும் இடத்துக்கான கட்டணம் இலவசமாகவும் கூடுதலாகச் செய்யும் வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்கும் குழுக்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஆனால், இது போன்ற பயணங்களின்போது 100 சதவீதம் வசதிகளை எதிர்பார்க்க முடியாது. அதற்காக மோசமாக இருக்கும் என்று சொல்வதற்கும் இல்லை.

“இதில் இடத்தைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தனியாகப் பயணப்படுவர்கள் தன்னார்வலராகச் சேர விரும்புகின்றனர். முன்பின் பழக்கமில்லாத ஓர் இடத்துக்குச் சென்று அறிமுகமில்லாத குழுவுடன் தங்க வேண்டும் என்பதால், சில பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே உறுதி செய்துகொள்வது நல்லது.

இணையதளத்தில் நாம் தங்கவிருக்கும் இடத்தைப் பற்றிய விமர்சனங்களைப் பார்க்கலாம், மற்ற இடங்களோடு ஒப்பிட்டுப் பிரச்சினையின்றி இயங்கிவரும் இடத்தைத் தேர்வு செய்யலாம். சமீப காலமாகப் பெண்களும் அதிக அளவில் ‘Voluntourism’ செல்கின்றனர்.

இந்தியா முழுவதும் பரவலாக இது பிரபலமடைந்து வருவதால் இச்சேவையை வழங்கும் குழுக்களும் அதிகரித்துள்ளன. பயணத்தின் முடிவில் குறிப்பிட்ட அந்தக் குழுவிடமிருந்து உங்களுக்குச் சான்றிதழ் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. வித்தியாசமான அனுபவத்துக்கும், பட்ஜெட்டுக்குள் அடங்கும் பயணத்துக்கும் ‘Voluntourism’ பயணத்தைத் தேர்வு செய்யலாம்” என்கிறார் செந்தூரன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in