

டென்னிஸ் போட்டிகளின் உச்சமாக மதிக்கப்படும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்பவை இந்தியர்களுக்குக் கனவாக மட்டுமே இருந்தன. கலப்பு இரட்டையர் போட்டி வழியே 1997 ஃபிரெஞ்சு ஓபன் பட்டத்தை மகேஷ் பூபதி வென்றபோது சானியா மிர்சாவுக்கு 10 வயது.
விளையாட்டுக்கு அதிக முன்னுரிமை கொடுக்காத அந்தக் காலத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் டென்னிஸில் சாதிக்க நினைத்தது கனவுதான். ஆனால், ஆறு வயதிலேயே டென்னிஸ் மட்டையைப் பிடிக்கத் தொடங்கியிருந்த சானியா, தொழில்முறை டென்னிஸில் இந்தியாவுக்காக அனைத்து உச்சபட்ச சாதனைகளையும் புரிந்துவிட்டு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இப்போதைய கேள்வி அவருக்கு அடுத்து இந்திய மகளிர் டென்னிஸை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேறு யாராவது இருக்கிறார்களா என்பதுதான்.
2005 ஆஸ்திரேலிய ஓபன் மூன்றாவது சுற்றில் செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டபோது சானியாவுக்கு வயது 18. அந்தப் போட்டியில் அவர் தோல்வியைத் தழுவியிருந்தாலும் இந்திய வீராங்கனை ஒருவர் ஆஸ்திரேலிய ஓபனின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது அதுவே முதல் முறை. சானியா கவனிக்கப்பட்டார். கடைசி வரை முயன்ற அவரது போராட்ட குணத்துக்காகப் பாராட்டப்பட்டார். அவரது ஆடைத் தேர்வுக்காக விமர்சிக்கப்பட்டார்.
இளம் வயதிலேயே இந்த இரண்டையும் பக்குவத்துடன் எதிர்கொண்டார். தன்னுடைய வளர்ச்சிக்குத் தடையாக இருந்த எதையும் கண்டுகொள்ளாத அவர், அதே ஆண்டு தனது முதல் டபிள்யூ.டி.ஏ (Women’s Tennis Association - WTA) பட்டத்தை வென்று வெற்றியைப் பதிலாக அளித்தார்.
இரட்டையர் பிரிவிலும் கவனத்தைத் திருப்பித் திறமையுடன் ஆடினார். அதில் ஆதிக்கமும் செலுத்தத் தொடங்கினார். 2010இன் ஆரம்ப காலத்தில் சிறப்பான தனது ஆட்டத்தால் பல சர்வதேசப் போட்டிகளின் முக்கியச் சுற்றுகளுக்குத் தகுதி பெற்றிருந்த நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்தார். இந்தியா-பாகிஸ்தான் என இரு நாட்டுப் பிரச்சினையாக இது வெடிக்க, சானியாவின் உருவப் படங்கள் எரிக்கப்பட்டன.
அவரது தேசப்பற்று சந்தேகிக்கப்பட்டது. எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத அவர், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது தன் முடிவு என்பதில் உறுதியாக இருந்தார். விமர்சனங்களால் சோர்ந்துவிடாமல் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்தியாவுக்காக கோப்பைகளைக் கைப்பற்றினார்.
சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்த அவர், மகளிர் இரட்டையர் பிரிவில் 14 பட்டங்களை வென்று உலகத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார். இந்திய டென்னிஸின் உச்சத்திலிருந்த சானியாவிடம் தாய்மை குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டன.
“நான் ஜெயித்துக் கொண்டிருக்கும்போதும் அனைவரது கவனமும் எப்போது நான் தாயாவேன் என்பதில்தான் இருக்கிறது. இந்தக் கேள்விகள் அலுத்துவிட்டன” என ஒரு நேர்காணலில் ஆதங்கப்பட்டார் சானியா.
2018ஆம் ஆண்டு குழந்தை பிறப்புக்குப் பின் ஏற்பட்ட அதிக உடல் எடை பிரச்சினை, முழங்காலில் காயம் உள்ளிட்ட காரணங்களால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஓய்விலிருந்த சானியா டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று முதல் சுற்றில் வெளியேறினார். தாய்மை குறித்த கேள்விகளால் துளைத்தெடுத்த இச்சமூகம் குழந்தை பிறந்த பிறகு விளையாட்டில் பெரிதாகச் சோபிக்காததால் ‘டென்னிஸிலிருந்து எப்போது ஓய்வு?’ என கேட்கத் தொடங்கியது.
கடும் உடல் உழைப்பைக் கொட்டிய அவர், உடற்தகுதி அடைந்தபின் அதே ஆண்டு துபாயில் நடைபெற்ற ஹோபார் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்று விளையாட்டில் மீண்டும் கவனம் செலுத்தத்தொடங்கினார்.
ஆனால், அந்தப் பயணம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவ்வப்போது காயங்கள் ஏற்பட்டு உடல் ஒத்துழைக்காததால் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். “இந்தியப் பெண்கள் சாதிக்கத் தொடங்கும்போது களத்திலும் வெளியிலும் அவர்களின் போராட்டம் தொடரும்” எனச் சொல்கிறார் சானியா.
இந்தியப் பெண்களிடம் டென்னிஸைக் கொண்டு சேர்த்ததில் சானியாவுக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.ஆனால், விளையாட்டைத் தாண்டி ஓர் ஆளுமையாகவும் அவர் கொண்டாடப்படுகிறார். ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வழிகாட்டியாக சானியா நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கம்போல விமர்சனங்கள் எழுந்தன. டென்னிஸ் வீராங்கனை ஒருவர் எப்படி கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
விமர்சனங்கள், சானியாவுக்குப் புதிதல்ல. விளையாட்டுத் துறையில் ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்த அனுபவப் பாடங்களை அடுத்த தலைமுறைப் பெண்களுக்கும் கற்றுத்தர சானியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்க இருக்கிறார். களத்தின் தோற்றம்தான் மாறியிருக்கிறது; சானியாவின் தேட்டம் இன்னும் தொடர்கிறது.
- karthiga.rajendran@hindutamil.co.in