

‘பிரண்ட்ஸ்’, ‘தில்’ உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத் ஜெயந்த். 90ஸ் கிட்ஸ்களுக்குப் பரிச்சயமான அவர், நடிப்புக்கு இடைவேளை விட்டுவிட்டு, தற்போது சென்னையின் முக்கியக் கடற்கரைகளில் நடமாடும் ஐஸ்கிரீம் கடையை நடத்திவருகிறார்.
பெரும்பாலும் ஃபாஸ்ட் ஃபுட், ஷவர்மா போன்றவற்றை விற்பனை செய்யும் நடமாடும் உணவகங்களுக்கு மத்தியில் உப்பு - கார ஐஸ்கிரீம், குலாப் ஜாமுன் ஐஸ்கிரீம் என 15க்கும் அதிகமான புதுப்புதுச் சுவைகளில் ஐஸ்கிரீம்களை விற்றுவருகிறார் பரத். கல்லூரி நண்பர்கள் ஜெஸ்வின் பிரபு, சண்முக பாண்டியன் ஆகியோருடன் இணைந்து கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ‘டிக்கிள் ட்ரக்’ என்கிற ஐஸ்க்ரீம் வண்டிக் கடையை நடத்தி வருகிறார். பெசன்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையோரம் மாலை வேளைகளில் வந்து நிற்கும் இந்த ஐஸ்க்ரீம் வண்டியைச் சுற்றி கூட்டம் அள்ளுகிறது. ‘டிக்கிள் ட்ரக்’ நடமாடும் ஐஸ்கிரீம் கடை உருவான கதையை பரத் பகிர்ந்துகொண்டார்.
படிப்பால் தோன்றிய யோசனை: “ஐஸ்கிரீம் என்றதுமே உற்சாகமாகும் சிறுவர்களில் நானும் ஒருவன். கார்ட்டூன் சேனல்களில் பார்த்ததுபோல நடமாடும் பெரிய ஐஸ்கிரீம் வண்டிகள் நம் ஊரில் இல்லையே என ஏங்கியதுண்டு. கல்லூரிப் படிப்பு முடியும் வரை சினிமா, நாடகம் என நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தேன்.
பிறகு எம்.பி.ஏ., படிக்கும்போதுதான் தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அப்போது நடமாடும் உணவகங்கள் சென்னையில் பிரபலமாகிக் கொண்டிருந்தன. வழக்கமான உணவு வண்டியாக இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கான பட்ஜெட், உழைப்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டே நடமாடும் ஐஸ்கிரீம் கடையை நண்பர்கள் சேர்ந்து தொடங்கினோம்” என்கிறார் பரத்.
தொடக்கத்தில் செஃப் கவுசிக் என்பவர்தான் இவர்களுக்கு ஐஸ்கிரீம் தயாரிக்கக் கற்றுக்கொடுத்தார். சில மாதங்கள் இவர்களுடனேயே பயணித்தார். அவரிடமிருந்து கிடைத்த தயாரிப்பு முறையை வைத்து ஐஸ்கிரீமில் சொந்தமாகச் சில சுவைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள். “விற்பனையும் வரவேற்பும் சிறப்பாக இருந்தபோதுதான் கரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.
ஐஸ்கிரீம் பார்லராக இருந்திருந்தால் மோசமான நிலைமைக்குத் தள்ளப் பட்டிருப்போம். அதிக வாடகை, மின்சார செலவு போன்ற சிக்கல்கள் இல்லாததால் வண்டியை ஓரங்கட்டிவிட்டுத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது மட்டும் வண்டியைத் தள்ளினோம்” என்கிறார் பரத்.
புதுமையால் வரவேற்பு: சென்னையில் ஏகப்பட்ட ஐஸ்கிரீம் கடைகள் உள்ள நிலையில் இவருடைய நடமாடும் கடைக்கு வரவேற்பு குறையவில்லை. “ஐஸ்கிரீம்களில் வித்தியாசத்தைப் புகுத்தித் தரத்திலும் சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாததே இதற்குக் காரணம்” எனும் பரத், “குச்சி ஐஸ், கப் ஐஸ் போன்றவற்றில் வழக்கமான வெனிலா, சாக்லேட் சுவைகளைத் தவிர லிச்சி, ரோஸ் மில்க், குல்கந்து, கேசர் பாதாம், கேரட் அல்வா, ஒயிட் சாக்லேட் போன்ற சுவைகளைச் சேர்த்து ஐஸ்கிரீம்களைத் தயாரித்தோம்.
இவை அனைத்தையும் விடச் சற்றும் எதிர்பாராத அளவுக்கு ஹிட்டானது ‘உப்பு காரம்’ ஐஸ்கிரீம்தான். இனிப்பு வேண்டாம் என்பவர்களுக்காக ஒரு ஐஸ்கிரீம் இருக்க வேண்டும் என எண்ணி மோரில் உப்பு காரம் சேர்த்துச் செய்ததுதான் இந்தக் கார ஐஸ்கிரீம். இப்படி வித்தியாசமான சுவைகளில் தயாரான ஐஸ்கிரீம்கள் பெசன்ட் நகரில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் விரைவில் இன்னொரு கிளையைத் திறக்க இருக்கிறோம்” என்கிறார்.
மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள் எனக் கேட்டதற்கு, “உணவுத் தொழிலை வெற்றிகரமாக நடத்துவது சவாலாக உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஐஸ்கிரீம் கலாச்சாரத்தை நமது உணவுப் பழக்கத்துக்கு ஏற்ப இங்கும் கொண்டுவர வேண்டுமென விரும்புகிறோம். நிறைய பழங்கள், காய்கறிகளைக் கொண்டு புதுப்புது ஐஸ்கிரீம் வகைகளை உருவாக்க முயன்று வருகிறோம். இதில் நல்ல நிலையை எட்டிய பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவேன். சினிமாவிலிருந்து முற்றிலும் விலகவில்லை. இடைவேளைதான் விட்டிருக்கிறேன்” என்கிறார் பரத்.