லிரிக்ஸ் வீடியோக்களும் சென்னை இளைஞரும்

லிரிக்ஸ் வீடியோக்களும் சென்னை இளைஞரும்
Updated on
3 min read

அண்மைக் காலத்தில் யூடியூபில் வெளியாகி கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றன, ‘பீஸ்ட்’, ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘வாரிசு’ படங்களில் இடம்பெற்ற பாடல்கள். இந்தப் பாடல் வரிக் காணொளிகள் (லிரிக்ஸ் வீடியோ) மிகப் பெரிய வரவேற்பு பெற சென்னையைச் சேர்ந்த 24 வயதான வெங்கி என்ற இளைஞரும் ஒரு மறைமுகக் காரணம்.

இது யூடியூப் காலம். கோலிவுட்டில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு யூடியூப்தான் அடிப்படை விளம்பரம். முதல் காட்சி, பாடல் வரிக் காணொளி, டீசர், டிரெய்லர் எனப் படத்தின் அவ்வளவு விளம்பரமும் யூடியூப் வழியாகத்தான் நடக்கிறது. இதில் மக்களை அதிகம் கவர்வது பாடல் வரிக் காணொளிகள்தாம். ஆடியோ கேசட்டில் பாடல்கள் வெளியான காலத்தில் பாட்டுப் புத்தகங்களும் சக்கைப்போடு போடும். அதன் நீட்சியாகவே இன்று யூடியூப்பில் பாடல் வரிக் காணொளிகள் வெளியாகின்றன. இதில்தான் வெங்கி கலக்கி வருகிறார்.

“கல்லூரியில் படித்தபோதே ‘போஸ்டர் டிசைன’ராக பணியைத் தொடங்கினேன். ஆனால், பாடல் வரிக் காணொளிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், திரைத்துறையில் அதற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அனிமேஷன், வி.எஃப்.எக்ஸ் (VFX) போன்ற வேலைகளிலும் ஆர்வமிருந்ததால் இந்தக் காணொளிகளில் பணியாற்று வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

இதில் வெறும் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒளிப்படங்களை வைத்து எடிட் செய்யும் முறையிலிருந்து மாறுபட்டு, ஒரு கதை சொல்லலாக அதைச் சித்தரிக்க முயற்சித்தேன். அப்படி உருவாக்கப்பட்ட ‘நான் சிரித்தால்’ படத்தின் ‘பிரேக் அப்’ பாடல், ‘டாக்டர்’ படத்தில் ‘செல்லமா’, ’பீஸ்ட்’ படத்தில் ‘அரபிக்குத்து’ ஆகியவை ஹிட்டாகின. தனியாகத் தொடங்கிய இந்தப் பயணத்தில் இப்போது என்னுடன் சேர்ந்து மூன்று பேர் பயணம் செய்கிறார்கள்” என்கிறார் வெங்கி.

பாடல் காட்சிக் காணொளிகளுக்கும் பாடல் வரிக் காணொளிகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒரு பாடலுக்கான வேலைகளைச் செய்து முடிக்க 3 - 4 நாட்கள் ஆகும் என்கிறார் வெங்கி. “பாடல் வரிக் காணொளிகளுக்குப் படத்தின் கதை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், கதை தெரிந்திருந்தால் அதற்கேற்ப காணொளியின் சட்டகத்தை எளிதாக உருவாக்க முடியும்.

ஆஃப்டர் எஃபெக்கட்ஸ் (After effects), ப்ளெண்டர் (Blender), ஃபோட்டோ ஷாப் (Photoshop) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்திப் பாடலுக்கான டிசைன்களை வரைந்து எடிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாடலுக்கும் எழுத்துக்களின் வடிவங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும்.

அவை பார்ப்பதற்குப் புரியும்படி இருக்கவும் வேண்டும். பாடல் காட்சிக் காணொளிகள் திட்டமிட்டு படம்பிடிக்கப்படுபவை. ஆனால், பாடல் வரிக் காணொளிகளில் நம்முடைய கற்பனை திறனைப் பயன்படுத்தி கதை சொல்லலாக உருவாக்க வேண்டும்” என்று மடை திறந்த வெள்ளமாகப் பேசுகிறார்.

வெங்கி உருவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடல் வரிக் காணொளி யூடியூபில் 6 கோடி பார்வைகளைக் கடந்தது. அதே பாடலின் காட்சி காணொளியை ஒரு கோடிப் பேர்தான் பார்த்துள்ளனர். திரையரங்கிற்கு வரும் முன்னே முதலில் வெளியாவது பாடல் வரிக் காணொளிதான் என்பதால் இந்தக் காணொளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. இந்த டிரெண்ட் எவ்வளவு நாள் தொடரும் என்று கேட்டால் சிரிக்கிறார்.

“காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. திரைத் துறையைப் பொறுத்தவரை எல்லாமே கொஞ்சம் காலம்தான். இப்போது வைரலாகி வரும் பாடல் வரிக் காணொளிகளுக்கான தேவை நாளை இருக்குமா என்பது நிச்சயமில்லை. நாள்தோறும் புதுமைகள் அறிமுகமாவதால் இதில் பணியாற்றி வருவோர் தொடந்து தங்களைப் புதுப்பித்து கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார் வெங்கி.

சரி, பாடல் வரிக் காணொளிகளில் உள்ள முக்கியமான சவால் என்ன? “இதில் சவாலான விஷயமே காப்புரிமை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான். ஒவ்வொரு டிசைனையும் சொந்தமாகத்தான் உருவாக்க வேண்டும். இதற்கு அதிக உழைப்பு தேவைப்படும். இப்படி ஒவ்வொரு முறையும் கற்பனைத் திறனைக் கூட்டி ஒரு பாடலை எடிட் செய்து முடிக்க வேண்டும். அது மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெறும் போதுதான், அடுத்த பாடலுக்கான உந்துதல் கிடைக்கும்” என்கிறார் வெங்கி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in