

உலகக் கோப்பை ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 1975இல் மலேசியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. ஆனால், அண்மைக் காலமாக ஒலிம்பிக்கில் வெண்கலம், காமன்வெல்த்தில் வெள்ளி என இந்திய அணி ஜொலித்திருக்கிறது.
எனவே, இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையை இந்திய அணி அதிகப்படுத்தியிருக்கிறது. தற்போதைய அணி அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக உள்ளது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள துடிப்பான வீரர்கள் சிலர்:
கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ்: இந்திய ஹாக்கி அணி கடந்த 3 தசாப்தங்களில் கண்டிராத சிறந்த கோல் கீப்பராக உருவெடுத்திருக்கிறார் ஸ்ரீஜேஸ். துணிச்சலான வீரர் என்று பெயரெடுத்தவர். அணியின் மூத்த வீரரான ஜேஸ், களத்தில் இருக்கும்போது அவருடைய குரல்தான் ரசிகர்களின் கூச்சலைத் தாண்டி அதிகம் கேட்கும். அந்த அளவுக்கு விளையாடும்போதே வீரர்களுக்கு அறிவுரை வழங்கி, களத்தில் சுழல வைப்பார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்: 2019இல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த வீரருக்கான விருதை வென்றவர் ஹர்மன்பிரீத் சிங். இவருடைய தலைமையிலான இந்திய அணிதான் 40 ஆண்டுகள் கழித்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது.
நடுக்கள வீரரான இவர், பம்பரம் போல் களத்தில் சுழன்று விளையாடுவது இவருடைய பாணி. இந்த முறை உலகக் கோப்பையை வென்று தரும் முனைப்பில் உள்ளார்.
துணை கேப்டன் அமித் ரோஹிதாஸ்: எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பு ஆட்டம் விளையாடுவது ஹாக்கியில் ஓர் உத்தி. இதில் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படுவர் அமித் ரோஹிதாஸ்.
ஒலிம்பிக்கிலும் காமன்வெல்த்திலும் இந்தியா பதக்கங்களை வென்றதில் முக்கிய பங்காற்றியவர். துணிச்சலாகவும் பந்தைக் லாகவமாகக் கடத்தி செல்வதிலும் சிறப்பு வாய்ந்தவர்.
விவேக் சாஹர் பிரசாத்: இந்தியாவின் எதிர்கால கேப்டனாகக் கருதப்படும் வீரர்களில் முக்கியமானவர் விவேக்.
17 வயதில் அணியில் இடம்பிடித்து, இரண்டு ஆண்டுகளில் ‘ரைசிங் ஸ்டார்’ என்ற சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் விருதை வென்றவர், துடிப்பான இளம் வீரரான விவேக்கும் நடுக்கள வீரர்தான். தடுப்பு ஆட்டத்தில் வல்லவரான இவர், களத்தில் சுழன்று ஆடுவதிலும் சிறந்தவர்.
மந்தீப் சிங்: ஹாக்கி களத்தில் முன்கள வீரராக சிறப்பாக விளையாடி வரும் வீரர்களில் ஒருவர் மந்தீப் சிங். மூத்த வீரரான இவருடைய தாக்குதல் பாணி ஆட்டம் சிறப்பு வாய்ந்தது. 2017 சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து சிலிர்க்க வைத்தவர்.
சர்வதேச ஹாக்கியில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், முத்தாய்ப்பாக உலகக் கோப்பையை வென்றால், இவருடைய ஹாக்கி வாழ்க்கை முழுமை பெறும்.