

‘வாழ்க்கை இருக்கும் வரை நம்பிக்கையும் இருக்கிறது’ என்றார் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங். அறிவியல் துறைக்கு ஹாக்கிங் வழங்கிய நிகரற்ற பங்களிப்பால் மாற்றுத்திறனாளிகள் மீதான சமூகத்தின் பார்வை மாறத் தொடங்கியது.
அவர் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்திருந்தாலும் சமூகம் திறமையான அறிவியலாளராக மட்டுமே இன்றும் அவரை நினைவுகூர்கிறது. அவரைப் போலத் தனித்திறமையால் அடையாளம் காணப் போராடும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் குழு ‘நம்பிக்கை’ என்கிற கருப்பொருளில் ஒளிப்படங்கள், வாசகங்கள் அடங்கிய 2023ஆம் ஆண்டு காலண்டரை வடிவமைத்து அசத்தியிருக்கிறது.
செவித்திறன் குறைபாடுடைய ஒளிப்படக் கலைஞர்களுக்கான ஓர் அமைப்பாக ’மெட்ராஸ் ஃபோட்டோ பிளாக்கர்ஸ்’ இயங்கிவருகிறது. 2017இல் இந்த அமைப்பை நிறுவிய வத்சன் தன்னைப் போல செவித்திறன் குறைபாடுடைய கலைஞர்களுக்கு ஒளிப்படம் தொடர்பான வகுப்புகள் எடுத்து வேலை வாய்ப்புகளையும் அமைத்துக் கொடுத்துவருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் உருவானதுதான் மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்ட 2023 காலண்டர் டிசைன்.
“செவித்திறன் குறைபாடுடைய 8 ஒளிப்படக் கலைஞர்கள், 4 ஓவியக் கலைஞர்கள் இணைந்து காலண்டருக்கான வேலையைத் தொடங்கினோம். ’நம்பிக்கை’ என்பதுதான் அதன் கரு. அதைச் சார்ந்த ஒளிப்படங்கள், ஓவியங்களை உருவாக்கினோம். தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தைச் சேர்ந்த ஸ்வேதாவின் உதவியால் இந்தப் படங்களுக்கான வாசகங்களை நவீன் டேனியல் தமிழிலும், கீர்த்தனா ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்தனர்.
முழுக்க மாற்றுத்திறனாளி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வடிவமைக்கப்பட்ட முதல் காலண்டர் இது. இந்தப் படைப்பு மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்துறையில் பல ஆண்டுகளாகப் பயணித்தாலும் மக்களை சென்றடையும் பாதை சவாலாகவே இருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து கலை, இலக்கியம் மூலம் பொதுச் சமூகத்துடன் உரையாட முயற்சிக்கிறோம். அதன் ஒரு பகுதியாகவே இந்த படைப்பை உருவாக்கினோம்” என்கிறார் ஸ்ரீவத்சன்.
மாற்றுத்திறனாளி சமூகத்தினரின் பல ஆண்டு காலக் கோரிக்கையாக இருப்பது ‘ஒருங்கிணைந்த வளர்ச்சி’. என்றைக்கு மாற்றுத் திறனாளிகளின் சிக்கல் ஒரு சமூகச் சிக்கலாக உணரப் படுகிறதோ அப்போதுதான் அந்த வளர்ச்சி சாத்தியமாகும். இந்தச் சூழலில் கலைத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?
“நான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு 10 வயதில் குணப்படுத்த முடியாத ’auto immune disorder’ இருப்பது கண்டறியப்பட்டது. என் உடல் கொஞ்சம் கொஞ்சமாக ஊனமாகி இப்போது சில விரல்கள் தவிர எதுவும் இயக்கத்தில் இல்லை. அது ஒரு புறம் இருந்தாலும் தொடர்ந்து சமூக ஊடகம், புத்தகங்கள் வழியாகவும் மீம்ஸ், எழுத்து, ஒலிப்பேச்சு, டிஜிட்டல் ஓவியம் என அணுக வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் சமூக அரசியலைப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
இந்தச் சூழலில்தான் காலண்டர் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். கலை சார்ந்த துறையில் எங்களைப் போன்றவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். அந்தத் தளத்தில் எங்களுக்கான இடம் உள்ளதா, கலை அனைவருக்குமானதா என்பது கேள்விக்குறிதான்.
கலையைப் பயிற்றுவிக்கும் இடங்களும், அரங்கேற்றும் இடங்களும் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் இல்லை. திரைத்துறை உள்பட எந்தக் கலை வடிவமாக இருந்தாலும் எங்களையும் அந்தக் கலைப் படைப்புகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எங்களுக்குத் தேவையான அணுகல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்போது ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியமாகும் என நம்புகிறேன்” என்கிறார் சமூக செயற்பாட்டாளரான நவீன் டேனியல்.
பொதுச் சமூகத்துக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் களைய இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரை மாற்றுத்திறனாளிகள் பற்றிய புரிதலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், செயலில் மாற்றங்களைக் காண்பிக்க வேண்டும் என்கின்றனர் இந்த இளைஞர்கள்.