

ஒவ்வோர் ஆண்டும் எதிர்பாராத மனிதர்கள், சம்பவங்கள் டிரெண்ட் ஆவது தவிர்க்க முடியாததாகி விட்டது. புத்தாண்டில் டிரெண்டிங்கில் இருக்கப்போகும் தொழில்நுட்பம், உடை, உணவு என்னவாக இருக்கும்?
தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் காலகட்டம் இது. எனவே, இதன் வளர்ச்சி இந்த ஆண்டு இன்னும் தீவிரமாக இருக்கக்கூடும். ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் எழுதவும், வரையவும் முடியும். மக்களின் பயன்பாட்டுக்கும் இது வந்துவிட்டது.
இதனையடுத்து மனித மொழியை இன்னும் நுட்பமாகப் புரிந்துகொள்ளும் ஏஐ கருவிகள்தாம் 2023ஐ ஆக்கிரமிக்கப்போகின்றன என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பு. புதிய உலகை கட்டமைக்க உதவும் இத்தொழில்நுட்பங்களால் அதிக வேலைவாய்ப்பும் உருவாகலாம். ஏஐயைத் தவிர மெய்நிகர் தொழில்நுட்பம் இந்த ஆண்டின் பேசுபொருளாக இருக்கும்.
ஃபேஷன்: ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப உடை அணிவதே சமீபத்திய ஃபேஷன் டிரெண்ட். இந்த நிலை இனி வரும் ஆண்டுகளும் தொடரும் என ஃபேஷன் நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். கூடுதலாக சில ஸ்டைலான வகைகளும் இணைய இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
என்றைக்கும் டிரெண்டிங்கில் இருக்கும் ’டெனிம்’ ஆடைகளுக்கு இந்த ஆண்டிலும் மவுசு குறையாதாம். பார்ப்பதற்கு எளிமையான அழகான பிரிண்டெட் டிசைன்களும், கண்களைக் கவரும் வண்ணமயமான ‘க்ளிட்டர்’ டிசைன்களும் என நேரெதிர் டிசைன்களை மக்கள் விரும்புவார்கள் எனக் கணிப்புகள் சொல்கின்றன. புதிய ஃபேஷன் எப்படி இருக்கும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
உணவு: உணவு டிரெண்டுக்கு ஏது முடிவு என்பதை நிரூபிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஏதாவதொரு வித்தியாசமான உணவு வைரலாவது வழக்கம். 2023இல் முட்டை சார்ந்த உணவுகளில் புதுமைகள் புகுத்தப்படலாம் என உணவுத் துறை நிபுணர்கள் யூகிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்று உருவாக்கப்படுவதுதான் டிரெண்ட் என இல்லாமல் பழமையை நோக்கிச் செல்வதும் டிரெண்ட்தான் என்கின்றனர்.
உடல் ஆரோக்கியம் குறித்த கவனம் பெருகிவிட்டதால் அந்தக் காலத்து ஆரோக்கிய உணவு பழக்கத்துக்கு மக்கள் மாறுவார்கள் எனவும், அதையே உணவகங்களும் பின்பற்றும் நிலை பரவலாகலாம் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்களும் சொல்கிறார்கள்.
ஃபிட்னெஸ்: கடந்த சில ஆண்டுகளாகவே ஃபிட்னெஸ் பேரலை பலரைத் தாக்கி வருகிறது. இதே ‘வைப்’ இந்த ஆண்டும் தொடரும். அதற்கு ஈடு தரும் விதமாக கரோனா காலத்தில் தீவிரமடைந்த ஆன்லைன் ஃபிட்னெஸ் பயிற்சிகள் அடுத்த கட்டத்தை எட்ட உள்ளன. வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது, மனநலம், ஆரோக்கியம் சார்ந்து கவனம் செலுத்துவது, உணவு - உடற்பயிற்சி என இரண்டையும் சம விகிதத்தில் செய்வது ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறும் என ஃபிட்னெஸ் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல்: தவிர்க்க முடியாத சொல்லாகி விட்டது ‘டிஜிட்டல்’. வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகில் ‘Non Fungible Token’ எனும் ‘NFT’தான் டிஜிட்டல் புரட்சியின் புதிய வரவு. ‘NFT’ என்பது ஒரு டிஜிட்டல் சொத்து. ‘NFT’ ஆகும் படைப்புகளுக்கு நகல் கிடையாது, நகல் எடுக்க முடியாது. அதனால்தான் அதற்கு பெரும் மதிப்பு.
சமீபத்தில் அமிதாப் பச்சன் ‘NFT’இல் தனது ஒளிப்படங்களை வெளியிட்டு கோடிகளை ஈட்டினார். அவரைத் தொடர்ந்து கமல்ஹாசன் ‘NFT’இல் தடம் பதித்தார். ‘NFT’இல் ஆர்வமுள்ள சாமானியர் பலரும் கற்றுத் தெளிந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு இன்னும் பலரை ‘NFT’ ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளம்: சமூக வலைத்தளமின்றி அமையாதுஉலகு எனும் அளவுக்கு மனித வாழ்க்கையில் அதுவும் ஓர் அங்கமாகி விட்டது. எழுத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்த ஃபேஸ்புக்கை பின்னுக்குத்தள்ளி ஒளிப்படங்களால் ஆன இன்ஸ்டகிராம் இன்று ஆட்சி செய்து வருகிறது.
ஏற்கெனவே ட்விட்டர் ஸ்பேசஸ், கிளப் ஹவுஸ் என ஆடியோ செயலிகள் கவனம் பெற்ற நிலையில், இந்த ஆண்டு ஏராளமான ஆடியோ சார்ந்த வலைத்தளங்களை மக்கள் பயன்படுத்தக்கூடும். இதனால் இன்ஸ்டகிராமுக்கு போட்டியாக பாட்காஸ்ட்கள் (Podcasts) நிறைந்த ஆடியோ செயலிகள் அறிமுகமாகலாம். அதுமட்டுமின்றி கருத்துப் பரிமாற்றம் நிறைந்த கேமிங் தளங்கள் அடுத்த கட்டத்தை எட்ட காத்திருக்கின்றன.