

விடை பெறப் போகிறது 2022. இந்த ஆண்டில் விளையாட்டுத் துறையில் அரங்கேறிய முக்கியமான சில தருணங்களைப் பார்ப்போம்.
நம்பர் ஒன்னாக ஓய்வு: 2022 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆஷ்லே பார்ட்டி. இதன்மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியர் என்கிற பெருமையையும் பெற்றார். 2019 பிரெஞ்சு ஓபன், 2021 விம்பிள்டன், 2022 ஆஸ்திரேலிய ஓபன் என அடுத்தடுத்து மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆஷ்லே, உலகத் தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தார். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சியூட்டினார். டென்னிஸ் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் கில்லியான ஆஷ்லே ஓய்வை அறிவித்தபோது அவருக்கு வயது 25!
கண்ணீருடன் ஓய்வு: டென்னிஸ் உலகில் 24 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். 1,500-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஃபெடரர், 41 வயதில் டென்னிஸிலிருந்து விடைபெற்றார். ஃபெடரருடன் பல தருணங்களில் மோதிய ரஃபேல் நடால், ஜோக்கோவிச் போன்ற வீரர்கள் ஃபெடரரின் கடைசிப் போட்டியின்போது கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.
மெஸ்ஸி - ம்பாப்பே மேஜிக்: 2022 கத்தார் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை பல சர்ச்சைகள், சில கொண்டாட்டங்கள், ஏமாற்றங்கள் சூழ முடிந்து விட்டது. இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா-பிரான்ஸ் அணிகள் மோதியதில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இறுதிப்போட்டிக்கு முன்பே ஓய்வை அறிவித்திருந்த அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லயனெல் மெஸ்ஸி கோப்பையை வென்றபிறகு முடிவை மாற்றிக்கொண்டார். இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியின் ம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தது மட்டுமன்றி தங்கக் காலணி விருதை வென்றும் அசத்தினார்
கிரிக்கெட் உலகக்கோப்பை: மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் யஷ் துல் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 1988 முதல் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்கிற சாதனையையும் இந்திய அணி படைத்தது.
அஸ்வினின் நம்பர் 2! - மொகாலியில் இந்த ஆண்டு இந்தியா - இலங்கை இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக் கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தியபோது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் கபில்தேவை (434) முந்தினார். இதுவரை 87 டெஸ்டுகளில் விளையாடியிருக்கும் அஸ்வின் 442 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டின் முகங்கள்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முகமாக 23 ஆண்டுகளாக இருந்த மிதாலி ராஜ் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். 16 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர், 12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள், 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளரான ஜூலான் கோஸ்வாமியும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 39 வயதான அவர் இந்திய அணிக்காக 12 டெஸ்ட், 68 டி20, 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
எதிர்கால நட்சத்திரம்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன். இந்த ஆண்டு துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 52 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்தார். முன்னதாக, மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி, லேகா ஆகிய இந்திய வீராங்கனைகள் மட்டுமே இப்பட்டத்தை வென்றுள்ளனர்.
முதல் செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவில் முதன்முறையாக சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டது. ஓபன் பிரிவில் இந்திய ‘பி’ அணியின் குகேஷ், நிகல் சரின், பிரக்ஞானந்தா, ரவுனக் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் இந்திய மகளிர் ‘ஏ’ அணியின் கொனேரு ஹம்பி, வைஷாலி, டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் வெண்கலப் பதக்கமும், தனி நபர் பிரிவில் குகேஷ், நிகல் சரின் ஆகியோர் தங்கப் பதக்கமும் வென்றனர்.
முதல் பதக்கம்: ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனீஷா ராமதாஸ் தங்கப் பதக்கம் வென்றார். தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீராங்கனை தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. 17 வயதான மனீஷா, சர்வதேச பாரா பாட்மிண்டன் களத்தில் இந்த ஆண்டுதான் அறிமுகமானவர். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவரும் அவருக்கு, ஆண்டின் சிறந்த பாரா வீராங்கனை விருதை சர்வதேச பாட்மிண்டன் அமைப்பு வழங்கியது. - கார்த்திகா ராஜேந்திரன், karthiga.rajendran@hindutamil.co.in