இளம் தம்பதியின் தமிழ்க் காதல்!

இளம் தம்பதியின் தமிழ்க் காதல்!
Updated on
3 min read

சங்க இலக்கியப் பாடல்கள் சமூக வலைத்தளத்திற்கு வந்தால் எப்படி இருக்கும்? அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது இளம் தம்பதி ஒன்று. சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொருளுரை எழுதியும், பொருள் சார்ந்த விளக்கங்களை ஓவியங்களாக வரைந்தும் வருகிறார்கள் நிவேதா - மேகநாத் தம்பதி. தமிழால் இணைந்த இந்த இணையரின் ’அகழ்’, ’பிம்பம்’ ஆகிய இன்ஸ்டகிராம் பக்கங்களில் தமிழ் வழிந்தோடுகிறது. இப்பக்கங்களைப் பல்லாயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்!

மொபைல் காதல், ஃபேஸ்புக் காதல், இன்ஸ்டகிராம் காதல், வாட்ஸ் அப் காதல் என்று இந்தக் கால காதல் டிஜிட்டல்மயமாகிவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல்மயத்துக்கு மத்தியில் வாசிப்பு மூலம் காதலர்கள் ஆகியிருக்கிறார்கள் மேகநாத் - நிவேதா. வாசிப்புப் பழக்கத்தால் கிடைத்த அறிமுகம் நட்பாகி, நட்பு காதலாகி, காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது?

மேகநாத் - நிவேதா
மேகநாத் - நிவேதா

“கரோனா பொதுமுடக்கத்தின் போது வாசிப்பே சுவாசமானது. சிறு வயது முதலே தமிழ் மொழியின் மீது தீவிர ஈடுபாடு உண்டு. அதனால், தமிழ்ப் புத்தகங்களை அதிகம் வாசிக்கத் தொடங்கினேன். அப்படி வாசித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளை ’பிம்பம்’ என்கிற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய எட்டு மணி நேரப் பணியைத் தாண்டி நட்பு வட்டத்தை உருவாக்கித் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்து வந்தோம். அப்படி ஒரு சூழலில்தான் மேகநாத்தைச் சந்தித்தேன்” என்கிறார் நிவேதா.

நிவேதாவைப் போலவே தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதிலும் சங்க இலக்கியங்களைத் தேடிப் படிப்பதிலும் மேகநாத்துக்கும் ஆர்வம் அதிகம். ஒரே விஷயத்தில் இருவருக்கும் ஒரேவிதமான ஈடுபாடு இருந்ததால் இருவரும் சேர்ந்து பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியப் பாடல்களுக்கு நிவேதா பொருளுரை எழுத, அதற்குப் பொருள் சார்ந்த விளக்கங்களை ஓவியங்களாக வரைகிறார் மேகநாத்.

“எங்களுடைய இந்தப் பயணத்தின் தொடக்கமாக அமைந்ததுதான் ‘அகழ்’ இன்ஸ்டகிராம் பக்கம். குறுந்தொகை, புறநானூற்றுப் பாடல்களைப் படித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கத்தையும் ஓவியத்தையும் அதில் பதிவிடத் தொடங்கினோம். இதற்காகச் சங்க இலக்கியப் பாடல்களைப் படித்து நிறைய கற்றுக்கொள்கிறோம். அப்படிப் படித்தபோதுதான் சங்க இலக்கியத் தமிழ்வழி வாழ்க்கை முறையில் ’தாலி’ கட்டும் பழக்கமே இருந்ததில்லை என்பது தெரியவந்தது.

சங்க இலக்கியப் பாடல்களும் அதற்கான ஒவியங்களும்
சங்க இலக்கியப் பாடல்களும் அதற்கான ஒவியங்களும்

இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்களுடைய காதலுக்குப் பெற்றோரிடம் அனுமதி வாங்கவே போராட்டமாக இருந்தது. ஆனால், அதையும் கடந்து பெற்றோரைச் சமாளித்துத் தமிழ்வழியில் திருமணம் செய்துகொண்டோம்” என்று பெருமையாகச் சொல்கிறார் நிவேதா.

திருமணத்துக்குப் பிறகு சங்க இலக்கியப் பாடல்களுக்கான பொருள், ஓவியங்கள் படைப்பது மட்டுமல்லாமல், தமிழ் சார்ந்த தொல்லியல் இடங்களுக்குப் பயணிப்பது, போஸ்ட்கிராஸிங் செய்வது என மனதுக்குப் பிடித்ததை இருவரும் சேர்ந்தே செய்துவருகிறார்கள். 2022 சென்னை தினத்துக்காக மேகநாத் வரைந்த அஞ்சல் அட்டை ஓவியங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. கலை இலக்கியம் சார்ந்து இருவரும் இயங்கினாலும் முழுநேரமாக இதில் களம் காண சிறு தயக்கம் இருப்பதாகவே இருவரும் சொல்கிறார்கள்.

சங்க இலக்கியப் பாடல்களும் அதற்கான ஒவியங்களும்
சங்க இலக்கியப் பாடல்களும் அதற்கான ஒவியங்களும்

“கலை சார்ந்த படைப்புகள் இயல்பாக உருவாக வேண்டும். வருமானம் ஈட்ட படைப்புகளைச் செய்தால் அதில் மனநிறைவு கிடைக்காது. இந்தக் காலத்தில் எல்லாமே கமர்ஷியலாகிவிட்டது. இன்ஸ்டகிராமில்கூடப் பணம் கட்டி பிரபலமடையலாம். உங்களது படைப்புகளுக்கும் இன்ஸ்டகிராம் பணம் தருகிறது. சமூக வலைத்தளத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கையைச் சார்ந்தும் பிரபலமடைவதைச் சார்ந்தும் இயங்கவேண்டி இருப்பதால் முடிந்தவரை அதைத் தவிர்க்கவே முயல்கிறோம். முழுநேரமாக ஒரு வேலையில் ஈடுபட்டு நேரம் கிடைக்கும்போது கலை சார்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் மேகநாத்.

இந்தத் தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்ற பொதுவாகச் சொல்லப்படும் கருத்தை மறுக்கும் நிவேதா, கரோனாவுக்குப் பிறகு அந்த நிலை மாறியிருப்பதாக அடித்துச் சொல்கிறார். “நாங்களும் 90ஸ் கிட்ஸ்தான். எங்களைப் போன்று பழந்தமிழைத் தேடிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவுதான். என்றாலும் தமிழில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றே நினைக்கிறேன். இன்று டிஜிட்டல் முறையில் வாசிக்கத் தொடங்கிவிட்டனர். கவிதை, சிறுகதை, நாவல் எனப் பிடித்ததைப் படிக்கவே செய்கிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் தமிழ் வாசிப்பு சார்ந்து இளைஞர்கள் இயங்கியும் வருகிறார்கள். அவர்களுக்கென ஃபாலோயர்ஸும் இருக்கிறார்கள். எங்கள் பக்கங்களைப் பின்தொடர்வோர் பெரும்பாலும் 20-35 வயதுக்கு உட்பட்டவர்களே. இவர்கள் வாசிப்பதையும் கற்றதையும் டிஜிட்டல் உலகில் பதிவுசெய்தும் வருகிறார்கள். தமிழ் வாசிப்பு என்பது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் நிவேதா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in