

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய உலகக் கோப்பைக் கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்றுவருகிறது. கோப்பைக்காக 32 அணிகள் மல்லுகட்டுகின்றன. உலகக்கோப்பை போன்ற பெரிய விளையாட்டுத் திருவிழாக்களின்போது பிரபல விளையாட்டு ரசிகர்கள் தங்கள் அபிமான வீரர்களின் முகத் தோற்றத்தைச் சிகை அலங்காரத்தில் செதுக்கி மைதானங்களில் கவன ஈர்ப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
ஆனால், இந்த முறை அந்த உத்தியை வீரர்கள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் வீரர் ஒருவரின் சிகை அலங்காரம் ரசிகர்களை அதிக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. உருகுவே அணியின் கோல் கீப்பரான செபாஸ்டின் சோசா, சிங்கத்தின் முகத் தோற்றத்தைத் தன்னுடைய தலையின் பின் பகுதியில் டாட்டூ குத்தியிருக்கிறார். கரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு, மீண்ட பிறகு முடி அதிகமாக உதிர்ந்தது.
அதனால், தலையை மொட்டையடித்துவிட்டு டாட்டூ போட்டுக்கொண்டதாகச் சிரிக்கிறார் சோசா. ஆனால், அவருடைய சிங்க டாட்டூ, வளரும் தலைமுடிக்கு மத்தியில் அசத்தலாக இருப்பதால், கால்பந்து ரசிகர்களிடையே சோசாவின் சிகை அலங்காரம் ட்ரெண்ட் ஆகிவிட்டது!
30 கிலோ தங்க மீன்! - வீட்டில் அழகுக்காகவும் சிலர் வாஸ்துவுக்காகவும் மீன்கள் வளர்ப்பதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். மீன் தொட்டி இல்லாதவர்கள் சிறு கண்ணாடிப் புட்டிகளில் மீன்களை வளர்ப்பதும் உண்டு. இதுபோன்ற மீன் வளர்ப்புகளில் ‘தங்க மீன்’ எனப்படும் கோல்டு ஃபிஷ், ஸ்பைடர், பிளாக் மோலி போன்றவை முக்கியமாக இடம்பெறும். குறிப்பாகத் தங்க மீன்கள் இல்லாத மீன் தொட்டிகளே இருக்காது.
தங்க மீன்கள் பெரும்பாலும் விரல் அளவுக்குத்தான் இருக்கும். ஆனால் பிரான்ஸில் ப்ளூவாட்டர் ஏரியில் மெகா சைஸ் தங்க மீன் கிடைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த மீனின் எடை 30 கிலோவுக்கும் அதிகம். இந்த மீனை பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி ஹாக்கேட் என்பவர் பிடித்திருக்கிறார். வழக்கமாக மீன் பிடிக்கச் சென்ற ஆண்டி இந்த மெகா சைஸ் மீனைப் பார்த்துப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால், சுலபத்தில் அகப்படவில்லை. அரை மணி நேர விடா முயற்சிக்குப் பிறகே தங்க மீனை அவர் பிடித்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக அதிக எடையில் இருந்த அந்தத் தங்க மீனை மீண்டும் ஏரியிலேயே விட்டுவிட்டதாகவும் சொல்கிறார் ஆண்டி! அந்த மீனுக்கு ‘காரட்’ எனச் செல்லமாகப் பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. அந்தத் தங்க மீனின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் இப்போது வைரல்!