ரவுண்டு கட்டும் சவுண்டு மணி

ரவுண்டு கட்டும் சவுண்டு மணி
Updated on
2 min read

அறுபதுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசித்தும் இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டக்கலைகளை ஆடியும் வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த 22 வயது ஒலிப் பொறியாளர் மணிகண்டன். பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையையும் ஆட்டக்கலைகளையும் கற்றுக்கொள்வது மட்டுமன்றி அவற்றை ஆவணப்படுத்தி மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டிருக்கிறார்.

“ஊர்த் திருவிழாக்களில் பறை வாசிக்கும் கலைஞர்களைப் பார்த்து அந்த இசையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதை வாசிக்கவும் ஆர்வம் பீறிட்டது. ஆனால், இசைக்கருவிகளுக்கும் சாதி சாயம் பூசி, பறையைக் கற்றுக்கொள்ளக் கூடாது என வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. என் மனத்திலோ ஏன் வாசிக்கக் கூடாது என்கிற கேள்வி எழுந்தது. இசை அனைவருக்குமானது தானே என்கிற கேள்வி என்னுள் ஆழமாக எழ, ஊரில் நடந்த பயிற்சிப் பட்டறையின் மூலம் பறை இசையையும் மற்ற கலைகளையும் தடையை மீறிக் கற்றுக்கொண்டேன். பின்னர் தரமணி எம்.ஜி.ஆர்., திரைப்படக் கல்லூரியில் படித்தபோது மாணவர்களுக்கு இலவசமாகப் பறை பயிற்சி வகுப்புகளையும் நடத்தினேன்” என்று தன்னுடைய இசை அறிமுகத்தைச் சொல்கிறார் மணி.

நாடு கடந்த இசை: இதன் பிறகு பறை மட்டுமல்லாமல் உடுக்கை, உறுமி, சங்கு, மிருதங்கம், மொட மேளம், நாமுழவு எனப் பல இசைக்கருவிகளையும் மணி கற்றுத் தேர்ந்திருக்கிறார். வட்டக்கிளி, சூரிய பிறை, சந்திரப் பிறை, இடி குவலை, மழையொலி மூங்கில், மீன் யாழ் உள்படப் பழங்காலத்து இசைக்கருவிகளையும் மீட்டுருவாக்கம் செய்யும் பணிகளையும் தொடங்கினார். அவர் கற்றுக்கொள்ளும் இசைக்கருவிகளை ஆர்வமுள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுத்துவருகிறார். கரோனா காலத்தில் வேலையின்றி முடங்கிய போது வீட்டில் இருந்தபடியே இசை வகுப்புகளை எடுத்திருக்கிறார் மணி.

“பறை இசை வகுப்புகளை நடத்திவந்தபோது கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், ஏன் இணைய வழியில் வகுப்புகள் நடத்தக் கூடாது என்கிற எண்ணம் ஏற்பட்டது. உடனே சமூக வலைத்தளத்தில் இணையவழிப் பயிற்சி வகுப்பு பற்றிய பதிவைப் பகிர்ந்தேன். எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, துபாய் என வெளிநாடுகளிலிருந்துகூட ஆர்வம் காட்டினர்.

தொடக்கத்தில் இலவசமாகத் தொடங்கிய பயிற்சி வகுப்பு, பின்பு கட்டணத்துக்கு மாறியது. என்னோடு வேறு சில இளைஞர்களும் கைகோத்தனர். அதில் கிடைத்த பணத்தை வைத்து கரோனாவால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய இசைக்கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற உதவியைச் செய்தோம். கரோனா காலத்தில் பல்வேறு இசைக்கருவிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்கினேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த இசைக்கருவிகளைச் சேகரித்து வாசிக்கக் கற்றுக்கொண்டேன்” என்கிறார் மணி.

மாற்றம் தொடங்கட்டும்: தற்போதைய கால ஓட்டத்தில் பாரம்பரிய இசைக்கருவிகள் மறைந்துவருகின்றன. இந்தச் சூழலில் அதில் ஆராய்ச்சி, மீட்டுருவாக்கம் என இறங்கியிருக்கும் மணி, அதே இசைக்கருவிகளால் வருவாய் ஈட்டிவருவதாகவும் சொல்கிறார். “சமூக வலைத்தளத்தின் உதவியால்தான் பல வாய்ப்புகளை என்னால் உருவாக்க முடிந்தது. நாம் ஆவணப்படுத்துவதை மக்களுக்கும் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் ‘சவுண்டு மணி’ என்கிற யூடியூப் அலைவரிசையைத் தொடங்கினேன். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

பொது நிகழ்ச்சிகளில் பாரம்பரிய இசைக்கருவிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பும் உற்சாகமும் மேற்கத்திய இசைக்கருவிகளால் ஈடுசெய்ய முடியாது என்பதேயதார்த்தம். ஆனால், கீபோர்டு, கிட்டார் போன்ற இசைக்கருவிகளை வாசிக்க அளிக்கப்படும் ஊதியம் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசிப்பதற்குக் கிடைப்பதில்லை. என்றாலும் இந்த நிலை தற்போது மெல்ல மாறிவருகிறது” என்று சொல்லும் மணி, “திரைத்துறையில் பாரம்பரிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

“பறை இசையைத் தாண்டி மண் சார்ந்த இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியம். பாரம்பரிய இசைக்கருவிகள் என்றாலே இழிவாகப் பார்க்கும் மனநிலை மாறிவருகிறது. ‘அனைவருக்குமான இசை’யாக இதை வலுப்படுத்த வேண்டும். அதை நோக்கியே நாங்கள் இயங்கி வருகிறோம். பறை இசையை வாசிக்க எதிர்ப்பு தெரிவித்த என் பெற்றோர், இன்று மாறிவிட்டார்கள். இசைக்குப் பூசப்படும் சாதிய அடையாளத்தைக் களைய என் வீட்டில் தொடங்கிய மாற்றம் சமூகத்திலும் நிச்சயம் நிகழும்” என நம்பிக்கையோடு சொல்கிறார் மணி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in