கனவுகளைத் துரத்தும் இளைஞர்!

கனவுகளைத் துரத்தும் இளைஞர்!
Updated on
2 min read

கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான ஐசிசி டி20 சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில்கூடத் தோல்வியடையாத இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே வீரராக சாய் ஆகாஷ் (26) இடம்பெற்றிருந்தது ஹைலைட்.

சாய் ஆகாஷின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி. பிறவிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவர். என்றாலும் படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டி. முதல் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் படித்தவர், பிறகு வழக்கமான கல்வி நிறுவனங்களிலேயே படிப்பைத் தொடர்ந்தார். சென்னை எம்.ஐ.டி.,யில் பி.டெக் ஐ.டி. பட்டப் படிப்பு முடித்த ஆகாஷ், கிரிக்கெட்டுக்குள் எப்படி வந்தார்?

“சிறு வயது முதலே கிரிக்கெட் என்றால் டி.வி. முன்பு உட்கார்ந்துவிடுவேன். என் ஆர்வத்தைப் பார்த்து வீட்டில் கிரிக்கெட் பேட்டும் பந்தும் வாங்கித் தந்தனர். விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட் ஆர்வம், பள்ளி, கல்லூரிக் காலத்தில் தீவிரமானது. நண்பர்கள், சீனியர்கள் விளையாடுவதைப் பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். எனக்குச் செவித்திறன் குறைபாடு இருந்தாலும் ஓரளவு பேசுவேன். எனவே, விளையாடும்போது கொஞ்சம் பேசிப் புரிந்துகொள்வேன். தொடக்கத்தில் என்னோடு விளையாடப் பலர் தயங்கினர். என்றாலும் நண்பர்கள் சிலர் என்னைக் கைவிடவில்லை. அப்படி ஏரியா அணிகளுக்காக விளையாட ஆரம்பித்து சென்னை, தமிழ்நாடு அணிகளுக்காக விளையாடி இப்போது தேசிய அணியில் இடம்பிடித்திருக்கிறேன்” என்று பெருமையாகச் சொல்லும் சாய் ஆகாஷ் தமிழ்நாடு அணியின் கேப்டனும்கூட.

சாய் ஆகாஷின் தந்தை சைவமணி ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர். தாய் காந்திமதி தனது மகனுடன் உரையாடவே சைகை மொழியைக் கற்றுக்கொண்டவர். மேலும் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் பயிற்றுநராக இருக்கிறார். முதல் இரண்டு பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்க, மூன்றாவது குழந்தையான ஆகாஷுக்குச் செவித்திறன் குறைபாடு இருந்ததை நினைத்து அவர் துவளவில்லை. ஆகாஷுக்கு கிரிக்கெட்டின் மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்டு குடும்பமே ஆதரவு தந்து ஊக்கமளித்தது.

பெற்றோருடன் சாய் ஆகாஷ்
பெற்றோருடன் சாய் ஆகாஷ்

“சாதாரண குழந்தையைப் போன்று இல்லையென்றாலும் கூர்ந்து கவனிக்கும் திறன் சாயிடம் அதிகம் இருந்ததை உணர்ந்தோம். சிறு வயதிலேயே வாய் அசைவுகளைக் கவனித்துப் பதில் சொல்லப் பழகினான். பெரும்பாலும் சைகை மொழியைப் பயன்படுத்தாமல் அனைவரோடும் பழக முயல்வான். தனக்குச் செவித்திறன் குறைபாடு உண்டு என சாய் சொன்னால்தான் மற்றவர்களுக்கே தெரியும். இந்தக் குறைபாட்டுக்காக அவனுடைய கிரிக்கெட் ஆசைக்கு நாங்கள் தடை போடவில்லை. யாரையும் சார்ந்திருக்காமல் இருக்கும் இயல்பு சாயிடம் இருப்பதால், கிரிக்கெட் பயிற்சிக்குச் சென்று வர, வெளியூர் போட்டிகளில் பங்கேற்க நம்பிக்கையோடு அனுப்பி வைத்தோம். அதனால் அவனும் மகிழ்ச்சியாக இருக்கிறான், எங்களுக்கும் மகிழ்ச்சி. பொதுவாகச் சிறப்புக் குழந்தைகளுக்குத் தனித்திறன் ஏதேனும் கண்டிப்பாக இருக்கும். எனவே, விருப்பமானதை அவர்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். அந்தத் தனித்திறன் அவர்களுடைய வாழ்க்கையைக்கூட மாற்றலாம்” என்கிறார் காந்திமதி.

2018இல் நடைபெற்ற செவித்திறன் குறைந்தவர்களுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரராகத் தொடரை நிறைவு செய்தார் ஆகாஷ். ஆல்-ரவுண்டராக இருப்பதால் அணியின் பேட்டிங் டாப் ஆர்டரிலும், தேவைப்படும்போது பந்துவீச்சிலும் அசத்துகிறார் சாய் ஆகாஷ். எனினும், ஆகாஷால் கிரிக்கெட்டை முழு நேரமாகத் தொடர முடியுமா? “செவித்திறன் குறைந்தவர்களுக்கான கிரிக் கெட்டுக்கு இந்தியாவில் இன்னும் போதுமான அங்கீ காரம் கிடைக்கவில்லை. முழு நேர கிரிக்கெட்டராக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே அதிக போட்டிகள் நடத்தப்படும்போதுதான் திறமையானவர்களை இந்திய அணியில் விளையாட அனுப்பி வைக்க முடியும். செவித்திறன் குறைந்தவர்களுக்கான தேசிய, மாநில அளவிலான கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்குக் குறைந்த அளவிலாவது சம்பளம் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இது ஆர்வமுள்ளவர்களுக்கு உதவியாக அமையும்” எனும் ஆகாஷ், படிப்பு, கிரிக்கெட் மட்டுமன்றி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பொது அறிவுத் தகவல்களை சைகை மொழியில் பேசி யூடியூப் அலைவரிசையில் வெளியிட்டுவருகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in