

குறும்படம் எடுப்பது பெருவாரியான இளைஞர்களின் அடையாளமாகி இருக்கிறது. ஒரு குறும்படத்தின் வெற்றி அதில் உள்ள உயிரோட்டமான உணர்ச்சிகளைப் பதிவு செய்வதில்தான் இருக்கிறது என்பதை இளைஞர்கள் நன்கு புரிந்துவைத்திருக்கின்றனர். இதனால் பல குறும்படங்கள் முழு நீள படங்களாக மாறிவருகின்ற டிரெண்டும் அதிகரித்திருக்கிறது.
அந்த வரிசையில், ‘குட்டீம்மா' என்ற குறும்படம் இந்த ஆண்டு 'லிட்டில் ஷோ அவார்ட்ஸ்'ல் 600க்கும் மேற்பட்ட படங்களுடன் போட்டியிட்டு நான்கு விருதுகளை தட்டிச்சென்றிருக்கிறது. இக்குறும்படத்தின் இயக்குநர் கணேஷ் குமார் மோகன், ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள ஆழமான உறவினை அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
கனவுகளைத் தொடர்வோம்
கணேஷ் குமாருக்கு சிறுவயதிலிருந்தே திரைப்படங்களின் மீது காதல் இருந்திருக்கிறது. “பள்ளியில் படிக்கும்போதே சில கதைகளை எழுதி அதைக் குடும்பத்தினரிடம் நடித்துக் காட்டுவேன். ஆனால், சினிமா கனவைத் தொடர்வதற்கு ஆர்வம் இருந்தாலும், வாழ்க்கைப் பாதையாக அதை அமைத்துக் கொள்ளப் பயமாக இருந்தது. அதனால் எம். சி.ஏ. படித்து கணிப்பொறியாளர் வேலையை செய்துகொண்டிருந்தேன்” என்கிறார் கணேஷ். ஆனால், சினிமா கனவு துரத்திக்கொண்டே இருந்ததால், வேலையைவிட்டு கனவுப் பாதையையே தொடர்ந்திருக்கிறார் கணேஷ்.
சிறியதே அழகு
ஒரே முயற்சியில் சினிமா எடுத்துவிட வேண்டும் என்று நினைக்காமல் முதலில் குறும்படம் எடுத்ததில் கணேஷின் வெற்றி அடங்கியிருக்கிறது.
ஒரு கிராமப்புற பின்னணியில், குறும்பு நிறைந்த பாட்டிக்கும், நகர்புறத்தின் நவீன ரக பேரனுக்கும் இடையே நடக்கும் ‘எலியும்-பூனையும்’ போன்ற உறவை எடுத்துக்காட்டும் வேடிக்கை நிரம்பிய குறும்படமாக குட்டீம்மாவை கணேஷ் எடுத்திருக்கிறார். “என் பாட்டிக்கும் எனக்கும் இடையே நிகழ்ந்த பசுமையான, அழகான தருணங்களை மனதில் அசைபோட்டபோது உருவானதுதான் இந்தக் குறும்படம்” என்கிறார் கணேஷ்.
உணர்வுகளுக்கு மரியாதை
விடுமுறைக்குக் கிராமத்திற்கு வரும் பேரன் கிரிஷ் பாட்டியின் மேல் வைத்திருக்கும் பாசத்தை எப்படி வெளிக்காட்டுகிறான் என்பதைக் ‘குட்டீம்மா’வில் அழகாக வெளிப்படுத்தியதற்காக கணேஷுக்குப் பாராட்டு தெரிவிக்கலாம். இதில் பாட்டியாக நடித்த கே.ஆர். ரங்கம்மா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இவருடைய இயல்பான குறும்புத்தனமும், நடிப்புத்திறனும் இந்தக் குறும்படத்திற்கு வலுசேர்த் திருக்கிறது. பேரனாக நடித்த கணேஷின் நண்பர் எஸ்கே, நடிகை சுவேதா குப்தா மற்றும் பலரின் ஒத்துழைப்பு இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் கணேஷ்.
வெள்ளித்திரை அழைக்கிறது
குட்டீம்மா குறும்படத்தின் வெற்றி இவர் திரையுலகில் இயக்குநராக தடம் பதிக்கவும் உதவியுள்ளது. “என் முதல் படம் முழு நீள நகைச்சுவைத் திரைப்படம். விரைவில் என் திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும்” என்கிறார் கணேஷ். குறும்படத்தைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கணேஷுக்கு வெற்றிகிடைக்க வாழ்த்தலாம்.